பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைவு.. பருவமழையை எதிர்பார்த்து நெல் நடவு பணியை தொடங்கிய விவசாயிகள்! - Water release from Bhavanisagar dam is low
🎬 Watch Now: Feature Video
Published : Sep 4, 2023, 1:51 PM IST
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், கீழ்பவானி வாய்க்காலில் நெல் பயிரிடுவதற்காக, தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகு பாசன பகுதிகளில் உள்ள, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து 120 நாட்களுக்கு மொத்தம் 23 டிஎம்சி தண்ணீர் இப்பாசனத்திற்கு தேவை என்ற நிலையில், அணையில் 17 டிஎம்சி மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்த போது நீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு 15 நாட்கள் ஆன நிலையில் தற்போது அணையில் 14.7 டிஎம்சி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையை எதிர்பார்த்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலுக்கு 120 நாட்கள் முழுமையாக தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகமும் விவசாயிகள் மத்தியில் எழுந்து உள்ளது.
பருவ மழை வேடிக்கை காட்டி வரும் நிலையில், மழைபொழிவை எதிர்பார்த்து பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள கீழ்பவானி பாசனப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நெல்நடவு பணிகளை விவசாயிகள் துவங்கிய நிலையில், வயல்களில் நடவுக்கு சேற்றழவு பணி நடந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78 புள்ளி 24 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக 2 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.