குடைக்குள் மழலைகள்.. சிதிலமடைந்த பள்ளியால் அச்சத்தோடு கல்வி கற்கும் அவலம்! - ANDHRA PRADESH RAIN NEWS
🎬 Watch Now: Feature Video
அமராவதி (ஆந்திரப் பிரதேசம்): ஒடிசா, ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே இன்று (ஜூலை 27) ஆந்திராவின் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஸ்ஸன்னபேட் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் மேல்தளத்தின் வழியாக மழைநீர் வழிந்த சம்பவமும், இதன் நடுவே பள்ளி மாணவர்கள் குடைகளை பிடித்தப்படி, அமர்ந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
சில நாள்களாக ஆந்திராவின் பல மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஸ்ஸன்னப்பேட்டை கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப்பள்ளியில் தான் இந்த அவலநிலையின் நடுவே மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
சிதிலமடைந்த மேல்தளத்தின் வழியாக மள மளவென வழியும் மழைநீரால் பள்ளி மாணவர்களின் கணுக்கால் அளவிற்கு மழைநீர் வகுப்பறைக்குள் தேங்கியுள்ளது. இதற்கு நடுவே, கைகளில் குடையோடு அமரும் நீண்ட இருக்கைகளில் பயத்துடன் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து அப்பகுதியின் தாசில்தார் சந்திரசேகர், மண்டல பரிஷத் வளர்ச்சி அலுவலர் எஸ்.வெங்கட்ரமணா, பேரூராட்சி செயல் அலுவலர் சுதாகர் ஆகியோர் அப்பள்ளியில் ஆய்வு நடத்தினர். மழைநீர் வடிவதால் மாணவர்கள் வகுப்பறைகளைப் பயன்படுத்த முடியாமல் வெளியில் குடைகளுடன் உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். மேலும், கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு வலியுறுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நாடு-நெடு' திட்டம் மூலம் ஆந்திராவில் பள்ளிகளின் தலையெழுத்தை முற்றிலுமாக மாற்றப்போவதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறிய நிலையில், இது குறித்து சம்பவத்தை குறிப்பிட்டு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.