"தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம்" - வடமாநில தொழிலாளர்கள் பேசிய வீடியோ வைரல்! - Tirupur District SP Sashang Sai

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 4, 2023, 12:25 PM IST

திருப்பூர்: தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளதாக வட மாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இந்த வீடியோவை திருப்பூர் மாவட்ட எஸ்பி சஷாங் சாய் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் வடமாநிலத்தவர்கள் மீது தமிழ் பேசும் சிலர் தாக்குதல் நடத்தியதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கோவையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக இரண்டு வீடியோக்களை சிலர் சமூக வலைதளஙகளில் பரவச் செய்தனர். 

இதன் விளைவாக,  பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் கடுமையாக சுட்டிக்காட்டி தர்ணாவில் ஈடுபட்டனர். அத்தோடு, தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக, அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதாகவும், இங்கு பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான வீடியோக்கள் உண்மையில்லை எனவும், அவை போலியாக பரபரப்பியவை எனவும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும் சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ வைரலானது.

இந்நிலையில் அதிக அளவிலான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்ததாக கூறப்பட்டது. இதனிடையே திருப்பூர் மாவட்ட எஸ்பி சசாங் சாய் வடமாநில தொழிலாளார்கள் பேசிய வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் பேசிய வடமாநில தொழிலாளியான உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சூரஜ்குமார், "நான் திருப்பூரில் 5 ஆண்டுகளாக இங்கு இருந்து வருகிறேன். ஒரு பிரச்சினையும் இல்லை. ரூமில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறேன். ஹோலி பண்டிகைக்காக பலர் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளார்கள். அவர்கள் மீண்டும் இங்கே வருவார்கள்" என்று கூறி உள்ளார். 

அவரைத் தொடர்ந்து பேசிய மற்றொரு வடமாநில தொழிலாளியான பீகார் மாநிலத்தை சேர்ந்த தாஸ், "இங்கு தமிழ்நாடு காவல்துறை தங்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு உதவி செய்கின்றனர். நாங்கள் பாதுகாப்பாக இங்கு பணிபுரிந்து வருகிறோம்" என்று தெரிவித்து உள்ளார். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.