வேடசந்தூரில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு! - திண்டுக்கல் மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-08-2023/640-480-19227608-thumbnail-16x9-din.jpg)
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள கே.குரும்பபட்டியில் அகோர வீரபத்திரர், ராவணேஸ்வரர், கருக்காளியம்மன், கெப்பாயியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயிலில் ஆடித் திருவிழா செவ்வாய்கிழமை தொடங்கியது. இதனையொட்டி பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
திருவிழாவை முன்னிட்டு கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்குச் சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆடித் திருவிழாவையொட்டி விரதம் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் முன்பாக அமர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, கோயில் பூசாரி ஆணி அடித்த காலணி அணிந்து ஆசி வழங்கினார். அதன் பின்னர் கோயில் முன்பாக வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார்.
அதனைத் தொடர்ந்து கோயில் பூசாரி பக்தர்கள் அனைவரையும் சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். சாட்டையடி பெற்று நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள், கோயிலுக்குச் சென்று சாமியை வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் உள்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.