கல்வி இடைநிற்றல்.... போதையால் சீரழியும் இளைஞர்கள் : தத்ரூப நடிப்பால் கண்கலங்க வைத்த பழங்குடியின மாணவ, மாணவியர்!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 27, 2023, 7:52 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைக் கிராமத்தில் பரண் அமைப்பு சார்பில் அரசியல் சாசன நிர்ணய தினம் மற்றும் பழங்குடியின குழந்தைகள் தின விழா இன்று (நவ. 27) கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், கேர்மாளத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஓவியம், கட்டுரை, பேச்சு, நாடகம், நடனம் மற்றும் பாட்டு போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் பின்னாளில் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்வாதாரத்தை இழப்பது குறித்த கருத்தில் பழங்குடியின குழந்தைகளின் நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் நடித்த பழங்குடியின குழந்தைகள் அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தத்ரூபமாக நடித்தனர்.
மது போதையில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனை பார்த்து கதறி அழும் காட்சியில் தாயாக நடித்த வின்சி கரோலின் என்ற மாணவி உண்மையிலேயே அழுதது காண்போரை நெகிழச்சியில் ஆழ்த்தியது. நாடகத்தில் நடித்த அனைத்து சிறுவர், சிறுமியரும் தங்களின் தத்ரூபமான நடிப்பின் மூலம் அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். சிறப்பாக நடித்த மாணவர் நிஷார்ந்த் மற்றும் மாணவி வின்சி கரோலினைப் பாராட்டி பள்ளி நிர்வாகம் பரிசுகளை வழங்கியது.