களைகட்டிய திருக்குறுங்குடி களக்காடு நம்பி கோயில் தேர்த் திருவிழா!
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயா் திருக்கோயில், 108 வைணவக் கோயில்களில் முதன்மையானதாகும். இந்தக் கோயிலை நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமழிசைபிரான் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகிய நால்வரும் மங்களாசாசனம் செய்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சுமாா் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், நம்பி ஆற்றங்கரையில் சுந்தரபாிபூரணநம்பி 5 நிலைகளில் அருள்பாலித்து வருகின்றார்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்தக் கோயிலில், பங்குனி திருக்கல்யாண பிரம்மோஸ்தவம் கடந்த மார்ச் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தினமும் காலை, மாலை சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மார்ச் 17) நடைபெற்றது. இதற்காக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.
தொடா்ந்து காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத உற்சவா் அழகிய நம்பி, திருத்தோில் ரதாரோஹணம் நடைபெற்றது. பின்னர் திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தேருக்கு எழுந்தருள, அங்கு அருளிச்செயல் கோஷ்டி நடைபெற்றது. அப்போது ஜீயர் சுவாமிகளுக்கு மாியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து ஜீயர் சுவாமிகள் தேரை வலம் வந்து தேங்காய் வடல் உடைத்தனர்.
அதனைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு மேஷ லக்கனத்தில் ஜீயர் சுவாமிகள், ஊா் பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா கோபாலா’ என்ற கோஷங்களுடன் நான்கு ரத வீதிகளிலும் தேரை இழுத்து வந்தனர். இந்த விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டார். மேலும் இந்த விழாவினை திருக்குறுங்குடி ஜீயர் மடத்தினர் மற்றும் அழகிய நம்பிராயர் தேவஸ்தானத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.