தூத்துக்குடியில் நடந்த தேசிய கடல் கயாக் சாகச போட்டியில் தமிழக அணி வெற்றி!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 10, 2023, 3:08 PM IST
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த தேசிய அளவிலான கடல் கயாக் சாகச போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக அணி. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பரிசுகளை வழங்கினார்.
இந்தியன் கயாக்கிங் மற்றும் கனோயிங் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு அசோசியேஷன் ஆப் கயாக்கிங் மற்றும் கனோயிங் சார்பில், தென் தமிழகத்திலேயே முதன்முறையாக பியர்ல் சிட்டி ஓஷன் ஸ்போர்ட் சாம்பியன்ஷிப் போட்டியான கடல் கயாக் சாகச போட்டிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைப்பெற்றது.
இப்போட்டியில், நின்று கொண்டு துடுப்பு செய்யக்கூடிய போட்டி மற்றும் அமர்ந்திருந்து துடுப்பு செய்யக்கூடிய போட்டி என ஒற்றையர், இரட்டையர் படகு போட்டிகள் இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய எல்லை பாதுகாப்புப் படை என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.
இரண்டு நாள் நடைபெற்ற போட்டியில், புள்ளிகள் அடிப்படையில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பரிசுகளை வழங்கினார். அதில் முதல் இடம் பெற்றவர்களுக்குத் தங்கப்பதக்கம் 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் வெள்ளிப் பதக்கம் 7 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாம் இடம் வெண்கலப்பதக்கம் 5 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகள் ஆசிய அளவிலான போட்டிக்கும், சர்வதேச அளவிலான போட்டிக்கும் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.