திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து SFI மாணவர்கள் போராட்டம்!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முன்பாக கல்லூரி மாணவர்கள் SFI தலைமையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திடீரென தேர்வுக் கட்டணங்களை உயர்த்தியதைக் கண்டித்தும், தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்ப பெறக் கோரியும், திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முன்பாக மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கல்லூரி நுழைவாயிலில் உள்ள கதவு மூடப்பட்டிருந்ததை காவல் துறையினர் திறக்க முற்பட்டபோது மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், SFI கொடிகளை பிடித்த வண்ணம் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, SFI மாநிலத் துணைத் தலைவர் தமிழ் பாரதி, திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் கோபிநாத் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் சாரதி ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து குண்டு கட்டாக வாகனத்தில் ஏற்றியபோது, மாணவர்கள் காவல் துறையினரின் வாகனத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.