பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர்.. அதிகாரிகள் அலட்சியம் என பெற்றோர் வேதனை! - பள்ளி மாணவர்கள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/20-06-2023/640-480-18801037-thumbnail-16x9-vlr.jpg)
வேலூர்: குடியாத்தம் அடுத்த செருவங்கி பஞ்சாயத்துக்குட்பட்ட கார்த்திகேயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
தற்போது குடியாத்தம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வரும் நிலையில், இந்தப் பள்ளியின் வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்களும் அவர்களை அழைத்து வரும் பெற்றோர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மழைக்காலங்கள் முழுவதிலும் இந்த பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர அவதிப்பட்டு வருவதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது கொட்டி தீர்க்கும் கனமழையால் வழக்கம் போல் இந்த பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே இந்தப் பள்ளியில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி, மீண்டும் மழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால், மேலும் துன்பத்திற்கு வழிவகுக்கும் வகையில் தேங்கிய மழைநீரால் அங்கு வசிக்கும் மக்கள் கொசுத் தொல்லை மற்றும் நீர் துர்நாற்றத்துடன் வாழவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு நோய்த் தொற்றுக்கும் தாங்கள் ஆளாகுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பலமுறை இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை எனக் கூறிய மக்கள் இனியாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கழிவு நீரை அகற்றி, வருங்காலத்தில் கழிவு நீர் சாலையில் தேங்காதவாறு கால்வாய்களைத் தூர் வாரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!