Ramadan: ரம்ஜான் பண்டிகை: புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! - Eid Mubarak 2023
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி: புனித ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் வெகுசிறப்பாக சிறப்பு தொழுகையுடன் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், ரம்ஜான் ஈகை பெருநாளை முன்னிட்டு வில்லியனூர் சுல்தான்பேட்டை ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றானது ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய நோன்பு ஆகும். ஏழைகளின் பசியை உணரும் வகையிலும், செல்வம் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வாரி வழங்க வேண்டும், இறைவனை இரவு பகல் பாராமல் தொழுது வணங்குவது என்ற அடிப்படையில் கடந்த 30 நாட்களாக கடும் விரதம் இருந்த இஸ்லமியர்கள் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து இன்று ரம்ஜான் பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி குத்பாபள்ளி, மீராப்பள்ளி, அஹமதியாபள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளிவாசல் உள்பட 100 மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதேபோல் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் முகமது யாசகம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 500-க்கும் குழந்தைகள், பெரியவர்கள் கலந்துகொண்டனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
அதேபோல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஈகைத்திருநாள் புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் பெருநாள் தொழுகையை நபிகள் வழியில் நிறைவேற்றினர். இதேபோல் புதுச்சேரியில் 6 இடங்களில் திடல் தொழுகை நடைபெற்றது.