அரசு நிலம் ஆக்கிரமிப்பு..! நூற்றுக்கணக்கான பனை மரங்களை வெட்டி சாய்த்த நபர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை! - செங்கல்பட்டு செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 7, 2023, 6:12 PM IST
செங்கல்பட்டு: அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எலப்பாக்கம் அடுத்த பின்னம்பூண்டி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருந்துள்ளது. அம்மரங்களை ஊராட்சி நிர்வாகம் தரப்பில் பல ஆண்டுகளாகப் பராமரித்து வருவதாகவும், அதன் மூலம் அப்பகுதி மக்கள் சிலர் வருவாய் ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த நிலத்திற்கு அருகே தனிநபர் ஒருவர் நிலம் வாங்கியுள்ளார். மேலும் அவர் வாங்கிய நிலத்திற்கு அருகில் இருந்த அரசுக்குச் சொந்தமான நிலத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததோடு, அந்த நிலத்தில் நல்ல நிலையில் வளர்ந்து இருந்த நூற்றுக்கணக்கான பனை மரங்களை இரவோடு இரவாக வெட்டி சாய்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமல்லாமல், அதில் இருந்த நூற்றுக்கணக்கான பனைமரங்களைத் தனது தனிப்பட்ட தேவைக்காக வெட்டிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.