Audio Leak: ஜாதி பெயரை கூறி ஆபாசமாக பேசிய போலீசார் - வைரலாகும் ஆடியோ! - ஜாதி பெயரை கூறி திட்டிய போலீஸ்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தை சேர்ந்த விஜயா தனியார் வங்கி மருத்துவ காப்பீடு திட்டக் குழு தலைவியாக உள்ளார். இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் மருத்துவச் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது தினந்தோறும் மருத்துவக் காப்பீடாக ரூ.1000 நிறுவனம் வழங்குவதாகக் கூறி மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்துள்ளார்.
இக்குழுவில் உள்ள பிரியதர்ஷினி என்பவரது கணவர் கிருஷ்ணகுமார் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்புள்ளார். மருத்துவக் காப்பீடு திட்டக் குழு தலைவி விஜயாவின் வீட்டிற்குச் சென்று தனக்குக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை செலவாக ரூ.5 ஆயிரம் தருமாறு கேட்டு தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் புஞ்சை புளியம்பட்டி தலைமைக் காவலர் சிவக்குமார், தகராற்றில் ஈடுபட்ட கிருஷ்ணகுமாரிடம் செல்போனில் பேசினார். தலைமைக் காவலர் சிவகுமார் தொலைப்பேசியில் பேசும்போது ”டேய்..நீ ஸ்டேஷனுக்கு வருகிறாயா அல்லது நாங்கள் அங்கு வரட்டுமா” எனக் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து அவரது ஜாதி பெயரைக் கூறியும் ஒருமையில் இழிவாகவும், ஆபாசமாகத் திட்டுகிறார்.
இந்த உரையாடலை போனில் பேசிய கிருஷ்ணகுமார் மற்றொரு போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த ஆடியோ வாட்ஸப், பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது. காவல் நிலையத்துக்கு போன் செய்து பேசும் நபரிடம் தரக்குறைவாகப் பேசிய காவலரின் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜாதி பெயரைக் கூறி இழிவாகவும், பிறப்பு குறித்துத் தரக் குறைவாகவும் பேசிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆடியோ குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகனுக்குப் புகார் சென்றது. இது குறித்து விசாரணை நடத்திய காவல் கண்காணிப்பாளர் தலைமைக் காவலர் சிவக்குமார் தரக்குறைவாகப் பேசியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தலைமைக் காவலர் சிவகுமாரை ஈரோடு ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதற்கிடையே கிருஷ்ணகுமார் போலீசாரிடம் தொலைப்பேசியில் ஆபாசமாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் கிருஷ்ணகுமாரைக் கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.