பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்! - பழனி கோயில் விழா

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 27, 2023, 3:24 PM IST

திண்டுக்கல்: பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாகப் பெருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழா பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை விநாயகர் அனுமதி பெறப்பட்டு அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கு சோடஷ திரவ்ய பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. 

காலசந்தியின்போது மூலவர், உற்சவர், விநாயகர், அஸ்த்ரதேவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் சேவல், மயில், பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருக்கோயில் யானை கஸ்தூரி முன்னே செல்ல திருக்கொடி கோயிலை சுற்றி வலம் வர செய்யப்பட்டு கொடிமண்டபம் கொண்டு வரப்பட்டது. 

கொடிமண்டபத்தில் ஆறு கலசங்கள் வைக்கப்பட்டு மயூரயாகம் நடத்தப்பட்டு தங்க கொடிமரத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக வாத்யபூஜை, தேவாரம், திருமுறைப்பாடல்கள் பாடப்பட்டன. பின் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கொடிமரத்துக்கு மாவிலை, தர்ப்பை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடத்தப்பட்டது. 

பூஜைகளை அமிர்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமணிய குருக்கள், சந்திரமவுலீஸ்வர குருக்கள் ஆகியோர் செய்தனர். தொடர்ந்து கொடிமண்டபத்துக்கு எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உச்சிக்காலத்தின்போது மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 

பத்துநாள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளியானை, கற்பகவிருஷம், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல வாகனங்களில் வீதிஉலா எழுந்தருள்கிறார். வரும் ஜூன் 1ஆம் தேதி மாலை திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஜூன் 2 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெறுகின்றன. 

விழா நாட்களில் கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்ட உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கீழ வன்னிப்பட்டு துள்ளும் சோறு படையல் விழா: 3 கிலோ மீட்டருக்கு 64 வகை உணவுகளை வைத்து படையல்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.