வெளிநாட்டில் தற்கொலை செய்த கணவரின் உடலை தமிழகம் கொண்டு வர மனு! இறப்பதற்கு முன் வெளியிட்ட பதற வைக்கும் வீடியோ - Petition to bring the body to Tamil Nadu
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: நத்தம் மூங்கில் பட்டி பகுதியை சேர்ந்தவர் பதினெட்டாம் மகன் சின்னையா (45). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் மாரிச்செல்வம் (14) கவிவரதன் (11) பிரநிஷா (5) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டில் கம்பி கட்டும் வேலைக்காக சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை 31) இரவு அவரது மனைவி கோகிலாவிடம் பேசிய பின்னர் தூங்கச் சென்று உள்ளார். பின்னர் அதிகாலை 4 மணி அளவில் கோகிலா என்பவரின் வாட்ஸ் அப்பிற்கு சின்னையா பேசி அனுப்பிய வீடியோ ஒன்று வந்து உள்ளது.
வீடியோவை பார்த்த மனைவி கோகிலா மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானார். வீடியோவில் சின்னையா “தன்னை இங்கு மிரட்டுகிறார்கள்,குழந்தைகளை பார்த்து கொள்ளவும்” என்று பதற்றத்துடன் பதிவு செய்து இருந்தது தெரியவந்து உள்ளது. பின்னர் உடனடியாக கோகிலா அவரது கணவரின் செல் போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பதட்டம் அடைந்த கோகிலா செய்வது அறியாது இதே ஊரைச் சேர்ந்த ஈராக் நாட்டில் வேலை பார்த்து வந்த வீரப்புலி என்பவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறி சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து வந்து உங்கள் கணவர் தூக்கு மாட்டி இறந்து விட்டார் என சொல்லியதாக கூறப்படுகிறது.
இதனால் மயக்கமுற்ற கோகிலா செய்வதறியாது திகைத்தார். உடனடியாக தனது கணவரின் இறப்பிற்கான காரணமும், இறந்த தனது கணவரின் உடலை இந்தியா கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி, நத்தம் வட்டாட்சியரிடம் மனு அளித்து உள்ளார். இச்சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து - மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!