குருத்தோலை ஞாயிற்றை முன்னிட்டு சாலைகளில் ஓசான்னா... பாடல்களை பாடியபடி பவனி
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: குருத்தோலை ஞாயிறினை முன்னிட்டு ராணிப்பேட்டை குழந்தை இயேசுகிறிஸ்து ஆலயத்தில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குருத்தோலை கைகளில் ஏந்தி ஊர்வலமாக பவனி மேற்கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் உயிர்ப்பையும் குறிக்கும் வகையிலும் தியானிக்கும் வகையிலும் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். அந்த தவக்காலத்தின் இறுதி வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடக்க நாளான இன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்றது.
இந்த குருத்தோலை நாளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக கிறிஸ்தவர்கள் ஜெருசேலம் நகரின் வீதிகளின் வழியாக இயேசு கிறிஸ்துவை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி, ஊர்வலமாக அழைத்து வந்ததை, குருத்தோலை ஞாயிறு தினமாக அனுசரிக்கின்றனர். இந்நாளில் கிறிஸ்தவர்கள் ஒலிவ் இலைகளை கைகளில் பிடித்தபடி ஊர்வலமாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
இந்த குருத்தோலை ஞாயிறு தினத்தை ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அற்புத குழந்தை இயேசு ஆலயத்திலிருந்து ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய கிறிஸ்தவர்கள் மற்றும் ராணிப்பேட்டை சிஎஸ்ஐ தூய மறியாள் ஆலயங்களுக்கு உட்பட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி இயேசுவின் ''ஓசான்னா.. ஓசான்னா...'' பாடல்களை பாடியபடி பக்தியுடன் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு தந்தை லியோ மரிய ஜோசப் தலைமையில் விழுப்புரம் கப்புச்சின் சபை சிறப்பு விருந்தினர் தந்தை எழில் மற்றும் சி.எஸ்.ஐ. தூய மரியாள் ஆலய தலைமை போதகர்கள் ராஜேந்திரன், குளோரிராஜா ஆகியோர் முன்னிலையில் 2000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் இருந்து குருத்தோலைகளை கையில் ஏந்தி முத்துக்கடை பேருந்து நிலையம்,எம்.பி.டி.ரோடு, நவல்பூர் கெல்லிஸ் ரோடு ,எம்.எப் ரோடு, பஜார் காந்தி ரோடு, எல்.எப்.ஸி சாலை எஸ்.எம்.எச் சாலை ஆகிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர்.