இசை வித்வான் ஸ்ரீ தியாகராஜருக்கு இசை அஞ்சலி.. கேதார் கருவி மூலம் சிறப்பு இசைக் கச்சேரி!
🎬 Watch Now: Feature Video
Published : Aug 27, 2023, 8:23 AM IST
தஞ்சாவூர்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் கேதார் இசைக் கச்சேரி சிறப்பாக நடைபெற்றது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் தெலுங்கு மொழி கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதும் அறியச் செய்தவர்.
இவரது புகழைப் போற்றும் வகையில் தஞ்சாவூரில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் ஸ்ரீ தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் கிதார் மற்றும் கீபோர்டு இணைந்த புதிய கருவியான கேதார் கருவி மூலம் இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் ஏ.எஸ்.ராம் இசை கச்சேரி மற்றும் அஸ்வின் குமார் வயலின், சங்கர சுப்பிரமணியன் மிருதங்கம், சேகர் கஞ்சிரா, பாலாஜிசாய்ராம் மோர்சிங் ஆகியோரின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், தியாக பிரம்ம சபா தலைவர் சீனிவாசன், உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், இசை ரசிகர்கள் கலந்து கொண்டு இசையை கேட்டு ரசித்தனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து தஞ்சை மாவட்டம் திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக் கரையில் 1847 ஆம் ஆண்டில் முக்தி அடைந்தார்.
அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த அவர், இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள் மற்றும் கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கர்நாடக இசைப் பிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே கர்நாடக இசைப் பிரியர்களால் இவர் ஆராதிக்கப்பட்டார்.
இதன் பொருட்டு தியாகராஜரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவையாறில் அமைந்துள்ள அவரது சமாதி அருகே ஆராதனை விழா, தியாக பிரம்ம மகோத்சவ சபையால் தொடர்ந்து வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கர்நாடக இசைப்பிரியர்கள் மற்றும் நாட்டின் பிரபல கர்நாடக இசை வித்வான்கள் கலந்து கொண்டு இசை அஞ்சலி செலுத்துவர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய விழாவாக புல்லாங்குழல் இசைக் கலைஞர்கள் இசைக்க ஆயிரத்திற்கும் மேற்பட இசைக் கலைஞர்கள் ஒருமித்த குரலில் ஸ்ரீதியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தும் விழாவும் நடைபெறும்.
மேலும் திருவையாற்றில் முக்தி அடைந்த அவரது சமாதியில் உள்ள ஸ்ரீதியாகராஜரின் உருவ சிலைக்கு பல்வேறு அபிஷேகம் நடைபெறும். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கர்நாடக இசைக் கலைஞர்கள் வந்து கலந்து கொள்வார்கள். அதைபோல் தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீதியாக பிரம்ம சபா சார்பில் பிரபல இசை வித்வான்களை கொண்டு மாதந்தோறும் பல்வேறு இசை கச்சேரி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.