"செந்தில்குமாரின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும்" - சிவன் வேடத்தில் கமிஷனிடம் புகார்
🎬 Watch Now: Feature Video
சென்னை: இந்து கடவுள்களை அவதூறாகப் பேசியதாகத் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மீது பார்வதி வேடமணிந்து வந்து இந்து மக்கள் கட்சியினர் ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (ஜூலை 15) புகார் அளித்துள்ளனர்.
இந்து கடவுள் பார்வதி, சிவன் குறித்து தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனைக் கண்டித்து அவர்மீது இந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் இசக்கி வெங்கட் ராஜா தலைமையில் அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஊர்வலமாகச் சென்ற அவர்கள் தருமபுரி எம்பி செந்தில்குமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகளை மட்டும் காவல் ஆணையர் அலுவலகம் உள்ளே இது குறித்துப் புகாரளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையரிடம் எம்பி செந்தில்குமார் மீது புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அளித்த மனுவில், 'திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் இந்து கடவுள்களான சிவன் பார்வதி ஆகியோர் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இது இந்து மக்கள் மனதைப் புண்படுத்தியுள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆன்மிக அரசியல் கட்சி நிறுவனர் சோமு ராஜசேகரன், தருமபுரி எம்பி செந்தில்குமாரின் அருவருக்கத்தக்கப் பேச்சு சம்பந்தமாக ஆவடி காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டது. இவர் இந்து சமயத்தின் மீது வெறுப்பைக் காட்டுபவராக உள்ளதாகவும், மொத்தத்தில் திமுக இந்து விரோத கட்சியாகச் செயல்படுவதை இவர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு சமீபத்தில் குடும்பக் கட்டுப்பாடு குறித்து பேசியபோது, பார்வதி, சிவன் ஆகியோருக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக அவர் கூறினார். ஆன்மிக அரசியல் கட்சியும் இந்து மக்கள் கட்சியும் இதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, ஏன் எதற்கு எடுத்தாலும் இந்து மதத்தையும் இந்து கடவுள்களையுமே கேலிக்கூத்துக்கு ஆளக்குவதாக கேள்வியெழுப்பினார்.
மாற்று மதமாக இருக்கும் பட்சத்தில், வாய் மூடி மௌனமாக இருப்பதாகவும், ஆன்மீகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது; மாற்று மதத்தின் கருத்துகளை நம்பிக்கையை இந்துக்களாகிய நாங்கள் மதிப்பதாகவும், வரவேற்பதாகவும் கூறினார். ஆனால், ஓட்டுக்காக மதப்பிரச்னையை தூண்டிவிட்டு பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார். ஆகவே, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது எம்பி பதவியை பறிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.