ondiveeran death anniversary: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 252 ஆவது நினைவு தினம்: கிராம மக்கள் அபிஷேகம் செய்து வழிபாடு!
🎬 Watch Now: Feature Video
தென்காசி: சங்கரன்கோவில் அருகே பச்சேரியில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 252 ஆவது நினைவு தினத்தையொட்டி இன்று (20.08.2023) அவரது நினைவிடத்தில் கிராம மக்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவிடம் உள்ளது. ஒண்டிவீரனின் 252 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அதிகாலையிலேயே கிராம மக்கள் விநாயகர் கோயிலில் இருந்து, மேள தாளங்களுடன் பால்குடம், முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனர். பின்னர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாநில நிர்வாகிகள், மற்றும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த, மாநில நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். பல்வேறு சமுதாய அமைப்பினரும் பச்சேரி கிராமத்திற்கு வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதனையொட்டி பச்சேரி கிராமத்திற்கு செல்லும் வழியெங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.