'சேவற்கொடி பறக்குதய்யா' - பழனி முருகன் கோயிலில் ரூ.4 கோடி உண்டியல் வசூல்! - palani thandayuthapani swamy temple
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த மாதம் மார்ச் 29ஆம் தேதி துவங்கி 10 நாட்கள் நடைபெற்றது. பங்குனி உத்திரத்திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக 20 நாட்களில் உண்டியல்கள் நிரம்பின.
இதை அடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 4 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 703 ரூபாய் கிடைத்துள்ளது. தங்கம் 1,098 கிராமும், வெள்ளி 18,622 கிராமும், வெளிநாட்டு கரன்சி 810 நோட்டுகளும் கிடைத்துள்ளது.
உண்டியலில் பக்தர்கள் தங்கத்தால் ஆன வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இவை தவிர பித்தளை வேல், ஏலக்காய், முந்திரி மற்றும் நவதானியங்கள் போன்றவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
உண்டியல் பணம் எண்ணும் பணியில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.