கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை அடுத்த தாய்முடி எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட பகுதியில் ஏழு யானைகள் கொண்ட கும்பல் முகாமிட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் முகாமிட்டு காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள எஸ்டேட் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை செய்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக கேரள வனப் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் இடம் பெயர்ந்து வால்பாறை பகுதிக்கு யானைகளின் வருகை அதிகரிப்பதால் ‘வணக்கம் நண்பரே! நான் வந்துட்டேன்!’ என கூறுவது போன்று இருக்கிறது.இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வராத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.மேலும் வால்பாறையை ஒட்டியுள்ள பன்னி மேடு சோலையார் சிலுவை மேடு தாய்முடி எம்டி சிறுகுன்றா கஞ்சமலை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் அதிக அளவில் உலா வருவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் மீறும் நபர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபதாரம் விதிக்கப்படும் எனவும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.