சாலையோர கடைகளை அடித்து நொறுக்கிய ஒற்றை யானை! பண்ணாரி அம்மன் கோயில் பக்தர்கள் அலறல்! - elephant attack
🎬 Watch Now: Feature Video
Published : Sep 27, 2023, 10:03 AM IST
ஈரோடு: சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் கோயில் அருகே சாலையோர கடைகளில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பண்ணாரி அம்மன் கோயில் அருகே உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி அருகே சாலை அமைந்துள்ளதால் அங்கு ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன.
இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் பண்ணாரி வனப்பகுதியில் நேற்று (செப். 26) இரவு வெளியேறிய ஒற்றை காட்டு யானை பண்ணாரி அம்மன் கோயில் அடுத்த சாலையோரத்தில் உள்ள கடைகளில் புகுந்து அட்டகாசம் செய்தது.
உணவு தேடி வந்த காட்டு யானை கடைகளின் தகர சீட்டு கூரையை சேதப்படுத்தியது. யானையைக் கண்டு அச்சமடைந்த பக்தர்கள் சத்தம் போட்டு மீண்டும் வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், காட்டு யானை அந்த கடையை உடைத்து முழுவதுமாக சேதப்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானை பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் நடமாடியதால் பக்தர்களும், அப்பகுதி மக்களும் அச்சமடைந்தனர்.