வனப்பகுதியில் நிலவும் வறட்சி - உணவு தேடி திரியும் வனவிலங்குகள்! - வனப்பகுதியில் நிலவும் வறட்சி
🎬 Watch Now: Feature Video
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது கோடை வெயில் தாக்கத்தினால் நீர் நிலைகள் வற்றி காணப்படுவதால் வனத்தில் இருக்கும் விலங்குகளான யானை, புலி, சிறுத்தை ஆகிய விலங்குகள் ஊருக்குள் உலா வருகின்றன. வால்பாறை கவர்கல் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை பசியினால் பலா மரத்திலிருந்து பலாப்பழம் பறிக்கும் காட்சியும், கேரள வனப்பகுதி குரியார் குட்டி பகுதியில் ஒற்றை யானை தண்ணீர் குடிக்கவரும் பொழுது தன் உடம்பை அசைத்து அழகாக ஆடிய காட்சியும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பரம்பிக்குளம் செல்லும் வழியில் உள்ள ஆனைபாடி செக் போஸ்ட் அருகில், ஒற்றை சிறுத்தைச் சாலையில் செல்லும் காட்சியும், கேரளா வனத்துறையினர் இரவில் வாகன ரோந்துசென்ற பொழுது, சாலை ஓரம் ஒற்றைப் புலி நடமாடிய வீடியோ காட்சியும் என தற்போது மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதைப் பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் வனவிலங்குகளுக்குத் தேவையான நீர், வனப்பகுதியில் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகள் சமீப காலமாக மின் வேலியிலும், மின் கம்பியிலும் சிக்கி உயிரிழந்து வரும் நிலையில், வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.