சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய ராணுவ வாகனம் - சிசிடிவி காட்சி வெளியீடு - நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய ராணுவ வாகனம்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 19, 2023, 1:15 PM IST
சென்னை: வண்டலூர் வெளிவட்ட சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது ராணுவ வாகனம் வேகமாக மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையில் உள்ள முடிச்சூர் அருகே சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. வண்டலூர் மீஞ்சூர் சாலையில் இருந்து பூந்தமல்லி, ஆவடி, திருத்தணி, திருப்பதி செல்வதற்கும், அதே போல மீஞ்சூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விரைந்து செல்வதற்கும் ஏராளமானோர் இந்த சாலையை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர் .
அந்த வகையில் நேற்று வழக்கம் போல் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் முடிச்சூர் அருகே உள்ள டோல்கேட்டை கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று டோல்கேட்டில் சுங்கக் கட்டணம் செலுத்த நின்றுள்ளது. அப்போது சுங்கச்சாவடி சாலை வழியாக அதிவேகமாக வந்த ராணுவ வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் ராணுவ வாகனத்தில் இருந்த 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து படுகாயம் அடைந்த ராணுவ வீரர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.