தேனியில் விவசாயிகளை அச்சுறுத்திய மலைப்பாம்பு.. தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு..
🎬 Watch Now: Feature Video
Published : Dec 24, 2023, 7:26 PM IST
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை செல்லும் சாலையில் உள்ள வயல் வெளிகளில் நெல் நடவு செய்யப்பட்டு விவசாயிகள் நீர் பாய்ச்சி வருகின்றனர். இந்த நிலையில் தொடர் மழையினால் அருகிலிருந்த மலைப் பகுதியிலிருந்த 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று விவசாய நிலத்திற்குள் நுழைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், வயல் வெளிகளில் களை எடுக்கச் சென்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், விவசாய நிலத்திற்குள் நுழைந்த மலைப்பாம்பைக் கண்டு அச்சத்தில் உறைந்தனர். மேலும் வயலில் பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் நிலைய அதிகாரி தர்மராஜ் தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று மலைப்பாம்பு பிடிக்கும் கருவிகளைப் பயன்படுத்தி நெல் பயிர்களுக்கு நீர் செல்லும் வாய்க்காலில் பதுங்கி இருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.
இதனை அடுத்துப் பிடிபட்ட மலைப்பாம்பை தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.