சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி - 236 பேர் கைது
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று (ஜூன் 28) சேலம் வந்தார். அப்போது, ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கத்தைச் சேர்ந்த திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் காஜா மொய்தீன்,
தமிழக வாழ்வுரிமை கட்சி சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், மதிமுக நிர்வாகி ஆனந்தராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 300 பேர் சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்பு திரண்டனர்.
இதனையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் பா.விஜயகுமாரி, துணை ஆணையர் எஸ்.பி.லாவண்யா ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். கோவையில் இருந்து கார் மூலம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டினர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 236 பேரை போலீஸார் கைது செய்தனர். இதன் பின்னர், கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், தமிழ்நாடு ஆளுநர் திருக்குறளை முறைகேடாகப் பேசி வருவதாகவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.