தனியாருக்குத் துணைபோகும் அரசு! வெட்டப்படும் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் - மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 19, 2023, 7:18 AM IST

பொள்ளாச்சி(கோவை): பொள்ளாச்சி அடுத்த ஆழியார் செல்லும் வழியில் சோமந்துறை சித்தூர் பிரிவில் உள்ள பில் சின்னம்பாளையம் கிராமப்பகுதியில், நெடுஞ்சாலை ஓரம் சுமார் 100 ஆண்டுகள் மதிக்கத்தக்க ஆலமரத்தை தனியார் வணிக வளாகப் பயன்பாட்டிற்காகவும், பரப்பளவிற்காகவும் வெட்ட நெடுஞ்சாலைத்துறை அனுமதி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனை அடுத்து நேற்று(ஜூன் 18) ஆலமரத்தை வெட்டும் பணிகள் துவங்கின. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பசுமை குழுவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபொழுது, இதற்காக அரசு சார்பில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஆலமரம் வெட்ட அனுமதி பெறப்பட்டதாகவும், அதனை முறையாக செய்வதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இதனை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள் மரத்தை வெட்டும் நபர்களிடம் வெட்டுவதை நிறுத்துமாறு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து அறிவுறுத்தினர். இதனை அடுத்து மரம் வெட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெரிவித்த அப்பகுதி மக்கள் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து அப்பகுதியில் இருக்கும் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை தனியார் வணிக வளாக பயன்பாட்டிற்காக எவ்வாறு வெட்டலாம் என்றும், அதற்கு எவ்வாறு அதிகாரிகள் அனுமதிக்கலாம் எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். 

மரங்களை போற்றி பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய அரசே மரங்களை அழிக்கும் தனியாருக்குத் துணை போவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் போராட்டங்கள் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். தனியார் வணிக வளாக பரப்பளவிற்காக 100 ஆண்டுகளுக்கும் மேலுள்ள பழமையான மரம் வெட்டப்படுவது அப்பகுதி மக்கள் மற்றும் பசுமைக் குழுவினர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.