சென்னை: பூஜை வழிபாடுகள் முதல் சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை வகிப்பது தேங்காய்தான். பூமியில் விழும் மழை நீரை உறிஞ்சி எடுத்து, அதனுடன் தன் தனித்துவமான சுவையை கொஞ்சம் கலந்து, உள்ளே தண்ணீர் அதனுடன் வழுக்கை என, தன்னை சமைத்து இளநீர் என்ற வரபிரசாதத்தை தரும் தென்னை இயற்கை கொடுத்த வரம்.
ஏழைகளின் குளிர்பானம், நோயாளிகளின் அருமருந்து, சோர்வுற்ற நேரத்தில் ஆற்றல் ஊட்டி உள்ளிட்ட பல கோணங்களில் பலன் தரும் தேங்காயை கொண்டாடவில்லை என்றால் எப்படி.. ஆண்டுதோறும் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வறுமையின் பிடியில் உயிர் நாடியாக விளங்கும் தேங்காய் மற்றும் தென்னை மரங்களின் நன்மை, அதனுடன் அதை பயிரிடுவதன் முக்கியத்துவம் குறித்து சர்வதே அளவில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக அளவில் 80க்கும் மேற்பட்ட நாடுகள் தேங்காய் சாகுபடியை பிரதானமாக கொண்டுள்ள நிலையில் இந்தியா அதில் தொடர்ந்து முந்நிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேங்காய் சாகுபடி அதிக அளவில் உள்ளது.
இப்படி பல நன்மைகளைத் தரும் தேங்காய் பயன்பாடு குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ சிறப்பு பேட்டி அளித்துள்ளார். தேங்காய் அதன் தன்மையை மாற்றாமல் அப்படியே சாப்பிடுவது உடலுக்கு நல்லது எனவும், தேங்காய் எண்ணையை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு சேரும் எனவும் உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மேலும், சர்க்கரை நோயாளிகள் தேங்காயை பச்சையாக சாப்பிடுவதன் காரணத்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் என மக்கள் நினைத்துள்ளதாகவும், அது முற்றிலும் தவறு எனவும் கூறியுள்ள அவர், அதில் இருக்கும் நார்ச்சத்து சர்க்கரையின் அளவை குறைக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் விஜயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மேலும், தேங்காய் பால் அல்சர் போன்ற நோய்களுக்கு தீர்வாக அமையும் எனக்கூறிய விஜயஸ்ரீ, அதில் அசிலிட்டி, ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் இருப்பதால் புண்களை விரைந்து குணமாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தேங்காய் எண்ணையைப் பயன்படுத்துவது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், அது முற்றிலும் தவறு எனக்கூறிய விஜயஸ்ரீ, குளிர் காலம் மற்றும் வெயில் காலங்களில் தன்மையை மாற்றிக்கொள்ளும் அனைத்து எண்ணெய்களுமே அளவோடுதான் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக, தேங்காய் எண்ணைய்யை அதிகம் கொதிக்க வைத்து அதில் சமைத்து உட்கொள்ளும்போது உடலில் கெல்டியல் என்ற கெட்டக் கொழுப்பு சேரும் எனவும், இது இருதய நோய் உள்ளிட்ட பல உடல்நல உபாதைகளுக்கு காரணமாக அமையும் எனவும் விஜயஸ்ரீ கூறியுள்ளார்.
ஆனால், அதே தேங்காய் எண்ணைய்யை நாள் ஒன்றுக்கு 5 மில்லி வரை எடுத்துக்கொண்டால், எவ்வித விளைவும் இல்லை எனவும் மற்ற எண்ணெய்களின் பயன்பாட்டுடன் தேங்காய் எண்ணையும் சேர்த்துக் கொள்ளலாமே தவிர, தேங்காய் எண்ணைய்யை மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளார். சுருக்கமாக கூற வேண்டும் என்றால், தேங்காயை அதன் இயல்பு மாறாமல் அளவோடு எடுத்துக்கொண்டால் நல்லது, இயல்பை மாற்றி அதிக அளவில் பயன்படுத்தினால் கெட்டது.
இதையும் படிங்க: சிறுநீரகம் செயலிழந்தால் இனி கவலையில்லை.. செயற்கை சிறுநீரகத்தைக் கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள்.!