சென்னை: விடிஞ்சா வெயில் வாட்டி வதைக்குது, பொழுதானா போதும் குளிர் நடுங்க வைக்குது, இதுக்கு இடையிலா சம்மந்தமே இல்லாம அப்பப்ப மழை வேற பெய்யுது.. என்ன காலநிலையோ ஒன்னும் புரியல என புலம்பாதவர்கள் அரிதுதான். ஏன் என்றால், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இயற்கையும் குழப்பத்தில் இருப்பதுபோலவே தோன்றுகிறது.
இந்த சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வைரஸ் காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட நோய்த் தொற்றுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற அறிகுறிகளுடன் வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இருந்து நம்மையும், நமது குடும்ப உறுப்பினர்களையும் தற்காத்துக்கொள்வது எப்படி எனப் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வைரஸ் காய்ச்சல்: பெரியவர்களை விடக் குழந்தைகள்தான் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு அதிகமும் பாதிக்கப்படுகின்றனர். காரணம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது, பள்ளியில் ஒன்றாக இருக்கும் சூழலில் பிற குழந்தைகளிடம் இருந்து வைரஸ் தொற்று இல்லாத குழந்தைக்கும் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதைத் தடுத்து நிறுத்த முடியாது.. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குழந்தைகளைத் தற்காத்துக்கொள்ள முடியும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடம் கைகளால் கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளைத் தொடக்கூடாது என்றும் அடிக்கடி பையில் இருக்கும் சானிடைசர் கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த உடன் வெதுவெதுப்பான நீரில் குளிக்கச்சொல்லுங்கள், அதற்குப் பிறகு சிற்றுண்டியை உட்கொள்ளக்கொடுங்கள்.
உணவுகளைச் சூடாக உட்கொள்ள வேண்டும்; வீட்டின் குளிர்சாதன பேட்டியில் உணவைத் தேக்கி வைத்து சூடாக்கி உண்பது, பழைய உணவை உட்கொள்வது உள்ளிட்டவைகளை முற்றிலுமாக தவிர்த்து, தேவைப்படும்போது புதிதாக உணவைச் சமைத்து உண்ணுங்கள். காய் கறி மற்றும் கீரை சூப், பழங்கள், அடிக்கடி சூடான நீர் உட்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைப்பதுடன், கிருமித் தொற்றில் இருந்தும் நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்.
வெயிலில் தாக்கத்தால் வீட்டில் ஏசி பயன்படுத்துகிறீர்களா? பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் ஏசியைப் போட்டுக்கொண்டு குளு குளுவென வீட்டிற்குள்ளேயே இருக்கத் தோன்றும். ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். முடிந்த வரை ஏசியில் இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அதே நேரம் அலுவலகங்களுக்குச் சென்றால் அங்கு சென்ட்ரலைஸ்டு ஏசிப் போட்டிருப்பார்கள். அதில் இருந்து நோய்த் தொற்று பரப்பக்கூடிய சூழல் அதிகம் இருக்கிறது. இதனால் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். கைகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். நோய்வாய்ப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.
வீடு மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள்; வீட்டை நாள்தோறும் அயோடின் நிறைந்த கிருமி நாசினிகொண்ட துடைத்து சுத்தமாக வையுங்கள். வீட்டைச் சுற்றுத் தண்ணீர் தேங்காமலும், புதர்கள் நிறையாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுவலை மற்றும் இயற்கையான முறையில் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: 'கும்குவாட்' பழம்பற்றித் தெரியுமா? பல உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.!