ஹைதராபாத்: அழகு என்பது ஒவ்வொருவரின் ஆசை. அழகாக இருக்க ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யும் மக்கள் இந்திய நாட்டின் பாரம்பரிய முறைகளை மறுப்பதும், மறப்பதும் கவலைக்குரியது எனக்கூறுகிறார் அரோமாதெரபிஸ்ட் மற்றும் அழகுக்கலை நிபுணரான பூஜா நாக்தேவ். மேலும், கடலை மாவு, மஞ்சள், தயிர் இவற்றின் கலவை தோல் பராமரிப்பில் இன்றியமையாத ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.
மஞ்சள்: மஞ்சள் சிறந்த ஒரு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள முதன்மை பண்பு மிக்க குர்குமின் என்ற வேதிப்பொருள் தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றி வயதான தோற்றத்தைக் குறைக்க உதவும். மஞ்சள் இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட பண்புகளுடன் உள்ளதால் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்குச் சிறந்த தீர்வாக அமையும். மேலும் சருமத்தைச் சீராகப் பேணி பாதுகாக்கும். அது மட்டும் இன்றி ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். மேலும், காற்றில் உள்ள மாசுபாடு காரணமாகவோ அல்லது உடல் சூடு காரணமாகவோ ஏற்படும் முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த உதவும்.
கடலை மாவு: கடலை மாவு சற்று தரிதரியான பண்போடு இருக்கும். இதனுடன் மஞ்சள் மற்றும் தயிர் கலந்து மென்மையாகச் சருமத்தில் தேய்க்கும்போது தோலில் உள்ள இறந்த செல்களை அது அகற்றி துவாரங்களைச் சுத்தம் செய்து பொலிவை ஊக்குவிக்கும். மேலும், இளம் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை ஆயில் ஸ்கின் என்பதுதான். இதனால் அவர்கள் முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். கடலை மாவு ஒரு சிறந்த எண்ணை உறிஞ்சி. இதை முகத்தில் வழக்கமாக தேய்த்து வரும்போது எண்ணை உறிஞ்சப்பட்டுத் தெளிவான முகப்பொலிவு கிடைக்கும். முகப்பருக்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தயிர்: லாக்டிக் அமிலம் நிறைந்துள்ள தயிர் இயற்கையாகவே ஒரு மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. சருமத்திற்கு போதிய ஈரப்பதத்தை வழங்கி மென்மையாக்க உதவுகிறது. தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன, இது சருமத்தின் நுண்ணுயிரிகளையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆதரிக்கும்.
இந்த மூன்று பொருட்களும் ஒன்றிணைந்து தயாரிக்கப்படும் ஒரு கலவை உங்கள் சருமத்திற்கு வரப்பிரசாதமாக அமையும் என்கிறார் அழகியல் நிபுணர் பூஜா நாக்தேவ். வீடுகளில் பெரியவர்கள் கூறும் சாதாரண வீட்டு வைத்தியம்தான் இது. ஆனால் இதைத்தான் அழகியல் நிபுணர்களும் நம்புகிறார்கள் என்பது இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை.
மஞ்சளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்பும், கடலை மாவின் எண்ணை உறிஞ்சும் பண்பும், தயிரின் ஈரப்பதத்தை வழங்கும் குணமும் சருமத்தைப் பேணி பாதுகாப்பதில் நூறு சதவீதம் சிறந்ததாக இருக்கும் என்கிறார் அழகியல் நிபுணர் பூஜா நாக்தேவ். மேலும் இந்த பேக்-கை ஒருவர் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் சோதனை அதாவது சருமத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தேய்த்து எரிச்சலோ, அரிப்போ ஏற்படுகிறதா என்பதை ஆராய்ந்து விட்டுப் பயன்படுத்துங்கள் எனவும் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கலாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மக்களை அச்சுறுத்தும் மழை மற்றும் குளிர்கால வைரஸ்: RSV-யை எதிர்கொள்வது எப்படி?