சென்னை: சரும பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கவும், சருமத்தை மேம்படுத்தவும், அழகு நிலையங்களை நாடிச் செல்கிறோம். பல்வேறு ஸ்கின் கேர் பொருட்களையும் வாங்கி உபயோகப்படுத்துகிறோம். இருப்பினும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வே கிடைக்காது. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் சருமம் பிரச்சனையிலிருந்து கொண்டே இருக்கும். அப்படியாக நாம் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?
முகத்தைத் துடைப்பதற்கு டவல்: தினமும் முகம் கழுவி முடித்தவுடன் முகத்தில் உள்ள நீரைத் துடைப்பதற்கு வீட்டிலுள்ள டவலை பயன்படுத்துவோம். ஆனால், அவ்வாறு செய்வது முறையன்று. தினமும் முகத்தைத் துடைக்கும் போது துவைத்து வெயிலில் காயவைத்த டவலையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அழுக்கான டவலில் பாக்டீரியாக்கள் இருக்கும். அவை முகத்தில் பட்டு, முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆகையினால் முகத்தைத் துடைப்பதற்குத் தூய்மையான டவலை பயன்படுத்தவேண்டும். குறிப்பாக ஒருவர் பயன்படுத்திய டவலை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது.
சீரான முறையில் காஸ்மெட்டிக்ஸ்: மாய்ஸ்ரைசர், சீரம், சாலிசிலிக் அமிலம், ரெட்டினால், நியாசிமைடு போன்றவற்றை உபயோகப்படுத்தும் போது கவனமுடன் பயன்படுத்துவது நல்லது. இவற்றைச் சீரற்ற முறையில் முகத்தில் தடவும் பட்சத்தில் அவை வேலை செய்யாது. ஆகையினால், அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது.
சன்ஸ்கீரினை மறந்துராதிங்க: சன்ஸ்கிரீனை கோடைக் காலங்களில் மட்டுமின்றி, எல்லா பருவ காலங்களிலும் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை SPF (Sun protection Factor) பயன்படுத்துவது நல்லது. நீங்கள் சன்ஸ்கிரீனை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதைத் தினமும் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்கீரினை பயன்படுத்தாமல் வெளியில் செல்லும் போது, புற ஊதாக்கதிர்களின் வெளிப்பாட்டால் முகப் பருக்கள் ஏற்படும். அதைத் தொடர்ந்து, ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையினால், வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது.
ஹைலூரோனிக் அமிலம் பயன்படுத்துபவர்கள்: ஹைலூரோனிக் அமிலத்தை எப்போது பயன்படுத்தினாலும் வறண்ட சருமத்தில் பயன்படுத்தாமல் ஈரமான சருமத்தில் பயன்படுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது சிறந்தது.
க்ரீம்களை கையால் எடுக்கக் கூடாது: டியூப் இல்லாமல் டப்பாக்களில் இருக்கும் க்ரீம்களை பயன்படுத்தும் போது, விரல்களாலோ அல்லது நகத்தாலோ எடுக்கக்கூடாது. ஏனெனில் நமது கைகளில் உள்ள பாக்டீரியாக்கள் க்ரீம்களில் பரவ ஆரம்பிக்கும். டப்பாக்களில் உள்ள க்ரீம்களை எடுப்பதற்குச் சிறிய ஸ்பேட்டூலா (Spatula) போன்ற கரண்டிகளைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் ஸ்பேட்டூலாவை கழுவ வேண்டும்.
முதலில் சன்ஸ்கிரீனா இல்லை மாய்ஸ்சரைசரா: சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்ரைசர் பயன்படுத்துவதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. சன்ஸ்கீரினை போட்டு விட்டு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டுமா அல்லது மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி விட்டு சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டுமா என்ற சந்தேகம் உள்ளது. பிஸிக்கல் சன்ஸ்கிரீன் (Physical Sunscreen), கெமிக்கல் சன்ஸ்கிரீன் (Chemical Sunscreen) என 2 வகையான சன்ஸ்கிரீன்கள் உள்ளன. பிஸிக்கல் சன்ஸ்கிரீனை பயன்படுத்தும் போது முதலில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் சன்ஸ்கிரீனை பயன்படுத்தும் போது சன்ஸ்கிரீனை பயன்படுத்திய பின் மாய்ஸ்ரைசரை பயன்படுத்த வேண்டும்.
காலையில் ஹைலூரோனிக் அமில மாய்ஸ்ரைசர்: சருமத்தை எப்போதும் ஈரப்பதத்தோடு வைத்துக்கொள்வது அவசியம். ஆகையினால் காலையில் ஹைலூரோனிக் அமிலம் கொண்ட மாய்ஸ்ரைசரையும், இரவில் ஹெவியான மாய்ஸ்ரைசர்களையும் பயன்படுத்த வேண்டும்.
மேக்கப்பை அகற்றி விட்டுத் தூங்கச் செல்ல வேண்டும்: ஒவ்வொரு நாள் இரவும் தூங்கச் செல்வதற்கு முன்பும் முகத்தில் உள்ள மேக்கப்பை அகற்றி, முகத்தை நன்கு கழுவ வேண்டும். காலையில் போட்ட மேக்கப்புடன் எண்ணெய், அழுக்குகள் போன்றவையும் படிந்திருக்கும். அதை அகற்றாமல் அப்படியே தூங்கும் போது நாளடைவில் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
இதையும் படிங்க: மழைக்காலத்திற்கு ஏற்றவாறு எப்படி மேக்கப் போடனும்னு தெரியுமா?