ஹைதராபாத்: நமது உடல் ஒரு எந்திரம் போல செயல்படுகிறது. இது சீராக செயல்பட கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் கட்டாயம் வேண்டும். இந்த ஊட்டச்சத்துகள் அனைத்தும் அறுசுவைகளான துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு வகை உணவுகளில் உள்ளன. இந்த சுவைகளின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் காயத்ரிதேவி அளித்த விளக்கங்கள் பின்வருமாறு.
இனிப்பு: இயற்கையாக கிடைக்கும் இனிப்புகளை சாப்பிட்டுவந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக கரும்பு, வெல்லம், அரிசி, பருப்பு, காய்கறிகளில் கிடைக்கக்கூடிய இனிப்புகளில் மன நலத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது தாய்மார்கள், குழந்தைகளுக்கு பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு உயிரணுக்களும் ஆரோக்கியமாக வளர்ச்சிய உதவுகிறது.
புளிப்பு: நமது உடல் ஆரோக்கியத்திற்கு புளிப்பு மிகவும் அவசியம். ஆனால், இனிப்பு வகைகளை சாப்பிடும் அளவிற்கு, புளிப்பு வகைகளை சாப்பிடக்கூடாது. அதேபோல முற்றிலும் தவிர்த்தவிடவும் கூடாது. புளி, தயிர், எலுமிச்சை உள்ளிட்ட புளிப்பு சுவை உள்ள உணவுகளை மிதமாக அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த புளிப்பு சுவை பசியையும், செரிமானத்தையும் அதிகரிக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. நீரிழப்பை குறைத்து, சிறுநீர் சீராக வெளியேற உதவுகிறது.
உவர்ப்பு: புளிப்பை போலவே பசி மற்றும் செரிமான மேம்பாட்டிற்கு உப்பு சுவை மிகவும் முக்கியமானது. இது வயிற்றில் வாயு தங்காமல் தடுக்கிறது. ஆனால் உப்பை குறைவாகவே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான உப்பானது, சருமத்தில் சுருக்கங்கள், முடி வெள்ளையாதல், முடி உதிர்தல், சிறுநீரக பாதிப்புகளுக்கு காரணமாகவிடும்.
கார்ப்பு: உடல் உறுப்புகள் சீராக செயல்பட கார்ப்பு சுவை பெரிதும் உதவுகிறது. அதோடு உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள கார்ப்பு மிகவும் அவசியமானதாகும். ரத்தம் உறைதல், ரத்த நாளங்களில் அடைப்புக்கு எதிராக கார்ப்பு செயல்படுகிறது. மிளகு, வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட கார்ப்பில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளன. இது நரம்பு தளர்ச்சி, நரம்பு கோளாறுகளை குணப்படுத்தும் சக்தி கொண்டுள்ளன.
கசப்பு: இந்த சுவை உணவுகள் வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கை தடுத்து நிறுத்துகிறது. அதிகப்படியான வியர்வையைத் தடுக்கிறது. குறிப்பாக ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது. எள், வேப்பங்காய், கடுகு, பாகற்காய் உள்ளிட்டவையில் கசப்பு சுவை உள்ளது.
துவர்ப்பு: இந்த சுவை மிகக் குறைவான அளவில் உட்கொள்ளப்பட வேண்டியது. கசப்பை போலவே வயிற்றுப்போக்கை தடுக்கிறது. ரத்தகொதிப்பை குறைக்கிறது. இது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கை குறைக்கிறது. இது உடலுக்கு வைட்டமின் சியை வழங்குகிறது. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய், புடலங்காய் போன்றவை துவர்ப்பு சுவை உடையவை.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு மன அழுத்தம் குறைந்தால் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது குறையும் - குழந்தைகள் நல மருத்துவர்