கரோனா நோய்த்தொற்றுப் பரவலால் தற்போது மக்கள் உடல் உழைப்பில்லாமல் முடங்கியுள்ளனர். உலகளவில் பாதிக்கும்மேல் மக்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதால், அவர்களின் வாழ்க்கை நடைமுறை மோசமாகப் பாதிக்கப்பட்டு, வாழ்க்கை முறையும் மாறியுள்ளது.
மக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதாலும் மிதமிஞ்சிய அளவு சாப்பிடுவதாலும் அவர்களின் உடல் எடை கூடுகிறது. இதுதான் மக்களின் மிகப்பெரிய கவலைக்கான காரணமாகும்.
இது குறித்து ஆப்பிள் மருத்துவமனை மருத்துவர் சஞ்சய் கே. ஜெயின் நம்மிடம் விவரித்த அம்சத்தை தொகுப்பாக அளிக்கின்றோம்...
உடல் பருமன் என்பது அதிக உடல் எடையைக் குறிப்பதாகும். இதனை உடல் எடையை, உயரத்தால் வகுக்கும்போது தெரிந்துகொள்ளலாம். இம்முறை மூலம் நாம் எந்த வகையான உடல்பருமனில் இருக்கிறோம் என்பதை அறியலாம்.
உடல் பருமனுக்கான காரணங்கள்
மருத்துவர் சஞ்சய் முக்கியமான இரண்டு வகையான உடல்பருமன் குறித்து நம்மிடம் விவரிக்கிறார். அவை:
- முறையாக உணவு உட்கொள்ளாமல் இருத்தல் அல்லது அதிகளவு உணவு உட்கொள்ளுதல்
- உடல் செயல்பாடு இல்லாதது (உடல் உழைப்பு, உடற்பயிற்சி).
மற்றும் பிற காரணிகளில் மரபியலின் பங்கு இருக்கலாம். அதாவது, பரம்பரை பரம்பரையாக, வேறு சில நோய்கள், அதற்கு அளிக்கப்படும் மருந்துகள் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை நடைமுறைகள்.
இன்றைய கடினமான சூழ்நிலையில், நாம் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாம் காலை எழுந்தவுடன் நேரடியாக கணினி முன்பு அமர்ந்துவிடுகிறோம். அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது உண்டாகும் கட்டுப்பாடுகள் வீட்டில் இல்லாததால், நாம் நினைத்ததை அதிகளவில் உண்கிறோம்.
இதுதவிர, இந்த மாதிரியான மன அழுத்தமில்லாத வாழ்க்கை உங்களை முற்றிலும் நிம்மதியாக உணரவைக்கிறது. இவை அனைத்தும் ஒரு வழியில் உடல் பருமனை அதிகரிக்க வழிவகுக்கிறது.
இது எதற்கு வழிவகுக்கும்?
உடல்பருமன் பலவகையான நோய்களுக்கு வழிவகுக்கும். அந்த நோய்கள் பின்வருமாறு:
- உயர் ரத்த அழுத்தம்
- நீரிழிவு நோய்
- அதிக கொழுப்புச்சத்து
- எலும்புச் சிதைவு நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்)
- கீல்வாதம்
- இதய நோய் அல்லது பக்கவாதம்
- சிறுநீரக செயலிழப்பு
- கல்லீரல் புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்கள்
அதிகமாகச் சாப்பிடுவதை தவிர்க்கவும்
அதிகப்படியான உணவை சாப்பிடுவதைத் தவிர்ப்பதற்காக, ஒரு அட்டவணையைத் தயார்செய்து, அதை நாள்தோறும் தவறாமல் பின்பற்ற வேண்டும். அந்த 24 மணிநேர அட்டவணையில் சரியான உணவு நேரங்களைச் சேர்த்து, இரண்டு உணவுகளுக்கு இடையில் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இதன்மூலம் உணவுக் கட்டுப்பாட்டை ஒரு நாள் அல்லது முழு வாரமும் கடைப்பிடிக்கலாம். நீங்கள் ஏற்கனவே அதிக உடல் எடையுடன் இருந்தால், உங்கள் அன்றாட உணவிலிருந்து தேவையற்ற கலோரிகளைக் குறைக்க விரும்பினால் நீங்கள் ஒரு உணவியல் வல்லுநரை அணுகலாம். அவர் உங்களுக்குச் சரியான உணவு விளக்கப்படத்தை வழங்க முடியும்.
தற்போது கரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, மக்கள் அதிகப் புரதங்கள், கொழுப்புகள், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
எதையும் அதிகமாக உண்ணும் அனைத்துமே தீங்கு விளைவிக்கும். நம் உடல் அதற்குத் தேவையானதை மட்டுமே உறிஞ்சி மீதமுள்ளவற்றை வெளியேற்றுகிறது. இருப்பினும், தொடர்ந்து அதிகமாக உணவை எடுத்துக்கொண்டால், அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.
எனவே, உங்கள் உடலின் தேவைகளுக்கு ஏற்ப சாப்பிடுவது அவசியம். மேலும், இந்த நாள்களில் சந்தையில் மிக எளிதாக கிடைக்கக்கூடிய செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் கிடைக்கின்றன. அவை சில சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று அறிவுறுத்தப்படுவதில்லை.
பின்பற்ற வேண்டியவை:
உடல்பருமனைக் குறைப்பதற்காகச் சில வழிமுறைகள்
அதிக இனிப்பு (glycaemic index) கொண்ட கொழுப்புகள் நிறைந்த உணவை உட்கொள்வதைத் தவிர்க்கவும். அதாவது பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகளவு சேர்க்கப்படுகிறது.
சரிவிகித உணவைக் கடைப்பிடிக்க 50-55% மாவுச்சத்து (Carb), 30% புரதம் (Protein), 15% கொழுப்பு (Fat) உள்ள உணவுகள் உண்ண வேண்டும். இந்தச் சரிவிகித உணவை கடைப்பிடிக்காமல் அதிகமாகச் சாப்பிட்டால், உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
அதிக சாலட், பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவை நார்ச்சத்து, குறைந்த கலோரி உள்ளவை.
ஒவ்வொரு நாளும் உடல் உழைப்பில் ஈடுபடுங்கள். தினசரி 45 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைபயிற்சி மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இன்றைய சூழ்நிலையில், நீங்கள் நடைபயிற்சி செய்ய முடியாவிட்டால், ஸ்பாட் ஜாகிங், ஸ்கிப்பிங் போன்றவை செய்யலாம்.
ஒருவர் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30-45 நிமிடங்களுக்கு யோகா, ஏரோபிக்ஸ் (சுவாசப்பயிற்சி) அல்லது வேறு எந்தப் பயிற்சிகளையும் செய்யலாம். மோசமான மன அழுத்தம் மற்றும் அதிக உணர்ச்சி வயப்பட்டு இருக்கும்போது உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
மக்கள் தங்கள் உணவுக்கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் வாழ்க்கை முறை, மற்ற பிற காரணிகள் உடல் பருமனுக்கு ஒரு காரணியாக இருக்கக்கூடும். ஆரம்பத்திலிருந்தே அதைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
குறிப்பாக இப்போது நாம் அதிக நேரத்தை வீட்டிலேயே செலவிடுகிறோம். அதனால் மன ரீதியாகவும் நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும்.
இவ்வாறு பயனுள்ள தகவல்களை மருத்துவர் பகிர்ந்துகொண்டார். செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவையை முறையாக கடைப்பிடித்து வாழ்வோம்! உடல்நலனில் கவனம் செலுத்துவோம்!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!