சென்னை: தாமரையின் தண்டில் இடம்பெற்றுள்ள தாமரை விதைகள் தான் மக்கானா (Makhana) என்று அழைக்கப்படுகின்றது. பணப்பயிரான இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடல் எடை இழப்பு முதல் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை ஒழுங்குப்படுத்துவது வரை உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்கலாம்: உடல் எடையைக் குறைப்பதில் மக்கானா பெரும் பங்கு வகிக்கின்றன. மக்கானாவில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து பசியை கட்டுப்படுத்தும். மேலும் இதில் உள்ள குறைந்த அளவிலான கலோரிகள் உடல்பருமன் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமைகிறது.
இளமையான தோற்றத்திற்கு: மக்கானாவில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு சுய சுத்திகரிப்பை வழங்குகின்றன. மேலும் மக்கானா உடலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த காற்றை வெளியேற்ற உதவுகின்றன. இதன் காரணமாக சருமம் முதிர்ச்சியான தோற்றத்திற்கு மாறும் நிலை தடுக்கப்படும். மேலும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: மக்கானாவில் உள்ள குறைவான கொழுப்பு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை விரட்டுவதற்கு உதவுகிறது. இதன் காரணமாக இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீரடையும்.
தசை வலிமைக்கு: மக்கானாவில் உள்ள புரதம் தசை வலிமைக்கு உதவுகிறது.
மலச்சிக்கலை தடுக்கிறது: மக்கானாவில் உள்ள அதிகளவு நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கக்கூடிய பிரச்சினையான மலச்சிக்கலை சரி செய்கிறது.
எலும்பு வலிமைக்கு: மக்கானாவில் உள்ள அதிகளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. பற்கள், மூட்டு பிரச்சினைகள் போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகின்றன.
உடல் சோர்வை சரிசெய்யும்: மாறுபட்ட வாழ்க்கைமுறையால் நாம் அடிக்கடி சோர்வுற்று விடுகிறோம். மக்கானாவை சாப்பிடுவதன் மூலம் இதை சரி செய்யலாம். மக்கானாவில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், புரதம் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியாக இருக்க உதவுகின்றன.
நீரிழிவைக் கட்டுப்படுத்தும்: மக்கானாவில் உள்ள அதிகப்படியான மெக்னீசியமும், குறைவான சோடியமும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
எப்படி சாப்பிடலாம்: வறுத்த மக்கானாவுடன் மிளகுதூள், உப்பு, சாட் மசாலா, மிளகாய்தூள், மஞ்சள் தூள் உள்ளிட்ட மசாலாக்கள் சேர்த்து சாப்பிடலாம்.
வறுத்த மக்கானாவுடன் சிறிது வேக வைத்த ஸ்வீட் கார்ன், வேர்க்கடலை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், ஓமப்பொடி, கரம் மசாலா, மிளகுதூள், உப்பு, சாட் மசாலா, மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பேல் பூரி போல சாப்பிடலாம்.
இதையும் படிங்க: மழைக் காலத்திற்கு ஏற்ற உணவுகள்.. டாக்டர்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?