'சிறுநீரக நோயுடன் நன்றாக வாழ்வது' என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்த ஆண்டு உலக சிறுநீரக தினம் மார்ச் 11ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது. இது சர்வதேச நெப்ராலஜி சங்கம், (International Society of Nephrology - ISN) சிறுநீரக அடித்தளங்கள் சர்வதேச கூட்டமைப்பு (International Federation of Kidney Foundations - IFKF ) ஆகியவற்றின் கூட்டு முயற்சியோடு 2006ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease - CKD) குறித்து லேன்செட்டில் வெளியான ஆய்வின்படி, 2017ஆம் ஆண்டில் மட்டும் 697.5 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1.2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சீனாவிலும் இந்தியாவிலும்தான் உள்ளனர்.
சர்வதேச சிறுநீரக தினத்தி்ன் குறிக்கோள்கள் என்னென்ன?
நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ள அனைத்து நோயாளிகளையும் முறையாக பரிசோதிக்க ஊக்குவிக்க வேண்டும்.
அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் சிறுநீரக நோய் குறித்த அபாயத்தைக் கண்டறிந்து குறைப்பதில் அவர்களின் முக்கியப் பங்கு குறித்து கற்பிக்க வேண்டும்.
சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதில் உள்ளூர் மற்றும் தேசிய சுகாதார அலுவலர்களின் முக்கியப் பங்கை வலியுறுத்த வேண்டும்.
உலக சிறுநீரக தினத்தன்று அனைத்து நாட்டு அரசும் நடவடிக்கை எடுத்து சிறுநீரகப் பரிசோதனையை ஊக்குவிக்க வேண்டும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை ஊக்குவித்து உயிர் காக்கும் உறுப்பு தானத்தை ஊக்குவிக்க வேண்டும்.
சிறுநீரகத்தின் செயல்பாடுகள் என்னென்ன?
இரத்தத்திலிருந்து நச்சுகளையும் அதிகப்படியான திரவங்களை அகற்றவும் சிறுநீரகங்கள் உதவுகின்றன.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகின்றன.
எலும்பு ஆரோக்கியமும் சிறுநீரகத்தை சார்ந்துள்ளது. சிறுநீரகம் உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றுவதால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பராமரிக்கப்படுகிறது. நமது உடலில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் நம் உடலின் செயல்பாட்டை உறுதி செய்கின்றன.
நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease - CKD)
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சிறுநீரக சேதத்தையும், சிறுநீரகத்தால் இரத்தத்தை சுத்திகரிக்க முடியாத தன்மையையும் நாள்பட்ட சிறுநீரக நோய் என விவரிக்கிறது. சிறுநீரகம் சேதமடைந்து சரியாக வேலை செய்யாததால், உடலில் நச்சு தங்கி, பல ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் பின்வருமாறு:
- இரத்த சோகை அல்லது குறைந்த எண்ணிக்கையிலான சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி
- அதிகரிக்கும் நோய்த் தொற்றுகள்
- குறைந்த கால்சியம் அளவு, அதிக பொட்டாசியம் அளவு, இரத்தத்தில் அதிகரிக்கும் பாஸ்பரஸ் அளவு
- பசியின்மை அல்லது குறைவாக சாப்பிடுவது
- மனஅழுத்தம்
முக்கிய ஆபத்துகள்:
- நீரிழிவு நோய்
- உயர் இரத்த அழுத்தம்
- இதய நோய்
- உடல் பருமன்
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருத்தல்:
அதிகப்படியான மருந்துகள், வலி நிவாரணிகளைத் தவிர்ப்பது சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கும். இது சம்பந்தமாக எட்டு முக்கிய விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அவை,
- சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
- உடலை நீர் ஏற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.
- சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
- குடிப்பழக்கம், புகைப் பழக்கத்தை தவிர்த்தல் வேண்டும்.
- இரத்த அழுத்தத்தை அன்றாடம் சரிபார்க்க வேண்டும்.
- ஆரோக்கியமான உணவு.
- தவறாத உடற்பயிற்சி.
- உடல் பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும்.