கோடைக்காலத்தைத் தொடர்ந்து வரும் பருவமழைக்காலம், சுற்றுப்புறத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். இது நமக்கு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தாலும், பெண்களுக்கு இதனால் சில அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
மழைக்காலத்தில் காற்றில் அதிகமாகக் காணப்படும் ஈரப்பதம், பெண்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை பாதிக்கும் தன்மையுடையது. இதனால் பெண்களின் பிறப்புறுப்பில் (vagina infection) தொற்று ஏற்படுகிறது.
இவற்றிலிருந்து எப்படி பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது என மகப்பேறியல் - மகளிர் மருத்துவ நிபுணர் விஜயலட்சுமியிடம் பேசினோம். மழைக்காலங்களில் பெண்கள் தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், ஈரப்பதம் இன்றி உலர்வாகவும் பராமரிக்க வேண்டும் என அவர் பேசத் தொடங்கினார்.
பருவகாலங்களில் வைரஸ் தொற்று
மழைக்காலங்கள் தவிர்த்து, பொதுவாகவே பிறப்புறுப்புகளில் அதிக ஈரப்பதம் இருக்கும்பட்சத்தில் கேண்டிடியாசிஸ் என்ற தொற்றுநோய் ஏற்படும். இது ஒரு பூஞ்சைத்தொற்று. இதற்கு அடிப்படைக் காரணங்கள் உடலில் உள்ள வியர்வையும் ஈரப்பதமும்தான். இவை, வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றை ஊக்குவிக்கின்றன.
கேண்டிடாவின் சில இனங்கள் தொற்றை ஏற்படுத்தும். அதில் பொதுவானது கேண்டிடா அல்பிகான்ஸ் (candida albicans). இது தோலின் மேற்புறமும், உட்புறமும் காணப்படும். வாய், தொண்டை, குடல், பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு இவை மூலக்காரணமாக உள்ளன.
பிறப்புறுப்பு சுகாதாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தும்போது, பிறப்புறுப்பு அரிப்பு, சிறுநீர் தொற்று, எரிச்சல் அல்லது தொற்றுகளை தடுக்கமுடியும்.
பிறப்புறுப்பு சுகாதாரம்: ஒருநாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பிறப்புறுப்பை கழுவி சுத்தப்படுத்துங்கள். சல்பேட் போன்ற ரசாயனங்கள் இல்லாத க்ரீமை பயன்படுத்தலாம்.
- மாதவிடாய் சமயங்களிலும், உடலுறவு கொண்ட பின்னரும் பிறப்புறுப்பை முறையாக சுத்தப்படுத்துங்கள்.
- நீண்ட நேரம் சிறுநீரை அடக்கக் கூடாது.
- கழிவறைகளை பயன்படுத்திய பின் அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
- கிருமி தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, பிறப்புறுப்பை கழுவிய பின்னரே ஆசனவாயை (anus) சுத்தப்படுத்த வேண்டும்.
- சிறுநீர் பாதையை சுத்தமாக வைக்க அதிக அளவில் நீர் அருந்துவது அவசியம்.
இதையும் படிங்க: பெண்களே உங்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியமாக இருக்கிறதா?
ஆடைகள் கவனம்
- சுத்தமான உள்ளாடைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
- இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.
- பருத்தியால் ஆன ஆடைகள் சிறந்த தேர்வாக இருக்கும். அவை ஈரப்பதத்தை உறிஞ்சி, காற்றோட்டத்தை அதிகரிக்கும்.
- இரவில் தூங்கும்போது காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.
- ஈரமான உள்ளாடைகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. எப்போதும் பிறப்புறுப்பு உலர்வாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
உடலுறவுக்குப் பிறகான சுகாதாரம்
- ஆணோ, பெண்ணோ யாராக இருப்பினும் உடலுறவுக்குப் பின்னர், பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல், கிருமித் தொற்று எளிதில் ஏற்படலாம். மழைக்காலங்களில் இதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
- உடலுறவின்போது கருத்தடை உறையை (Condom) பயன்படுத்த வேண்டும். இது தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. காண்டம் பயன்படுத்தும்போது, பிறப்புறுப்பில் அமில, காரத்தன்மைகளை சமநிலையில் வைத்து, தொற்று பாதிப்பை மட்டுப்படுத்துகிறது. இதைத் தான் pH பேலன்ஸ் என்று சொல்வார்கள்.
மாதவிடாய் காலத்தில் சுகாதாரம்
பருவங்கள் எப்படி மாறினாலும், மாதவிடாய் ஏற்படும்போது பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது கட்டாயம். நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நாப்கின்களை மாற்றும்போது, தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவு
பிறப்புறுப்பை பராமரிப்பதில் நல்ல பாக்டீரியாக்களின் பங்கும் உள்ளது. அவற்றின் வளர்ச்சியை ஆதரிக்க தயிர், வெங்காயம், பூண்டு, ஸ்ட்ராபெர்ரி, பச்சை இலை காய்கறிகள் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகளை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வெள்ளைப்படுதலின்போது நிறம் மாறுவதால் இவ்வளவு ஆபத்துகளா?