சென்னை: தீபாவளி வந்துவிட்டாலே கொண்டாட்டம்தான். விதவிதமான பலகாரங்கள், பட்டாசுகள், புத்தாடைகள் என வீடுகள் முழுவதும் விழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கப்படும். ஆனால் இந்த தீபாவளி நாள் தெய்வீக திருநாள் என்றால் அது மிகையாகாது. அன்றைய தினம் வீடுகளில் தீபம் ஏற்றி வைத்து லக்ஷ்மி தேவிக்கும், குபேரனுக்கும் பூஜை செய்தால் வீட்டில் வருமை அகன்று செல்வ மழை பொழியும் என்பது ஐதீகம். இது குறித்து ஆன்மீகவாதியான தேச மங்கையர்க்கரசி கூறிய சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
தீபாவளி அன்று எந்த கடவுளை வழிபட வேண்டும்: நாள் தோறும் பலர் தங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடுவது வழக்கம்தான். ஆனால் தீபாவளி நாள் அன்று மஹாலக்ஷ்மியை வழிபடுவது மிகவும் சிறந்தது எனக்கூறியுள்ளார் தேச மங்கையர்க்கரசி. அது மட்டுமின்றி இந்த நாளில் மஹாலக்ஷ்மியுடன் குபேரனையும் நினைவு கூர்ந்து, லக்ஷ்மி குபேர பூஜை செய்தால் வீட்டில் இருக்கும் வருமை நீங்கி, செல்வச் செழிப்போடு வாழலாம் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
லக்ஷ்மியையும், குபேரனையும் ஏன் வழிபட வேண்டும்: குபேரன் திசைக்குரிய கடவுள், செல்வ நலன்களை ஆளுவதற்கான வரத்தைச் சிவ பெருமான் குபேரனுக்கு வழங்கி, லக்ஷ்மி தேவி வழங்கும் செல்வ நலன்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கடவுளாக குபேரன் விளங்கி வருகிறார். இதற்கான வரத்தைச் சிவ பெருமான் குபேரனுக்குத் தீபாவளி நாள் அன்று வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நாளில் லக்ஷ்மி குபேர பூஜை செய்தான் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கும் லக்ஷ்மி தேவி, குபேரன் மூலமாக உங்களுக்குச் செல்வங்களை வாரி வழங்குவார் என்பது ஐதீகம்.
லக்ஷ்மி குபேர பூஜையை எப்போது, எப்படிச் செய்ய வேண்டும்: தீபாவளி அன்று மாலை 5 மணிக்கு லக்ஷ்மி குபேர பூஜை செய்வது சிறந்தது. அந்த பூஜையை இரவு 8 மணிக்கு முன்பாக முடித்துக்கொள்ள வேண்டும். மஹாலக்ஷ்மி திருவுருவப்படத்தை எடுத்து வைத்து அதற்கு மணம் மிக்க மலர்களால் மாலை அணிவித்து வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும், மணைப்பலகை ஒன்றை எடுத்து அதில் குபேர எந்திரம் வரைந்து மஹாலக்ஷ்மி திருவுருவப்படத்திற்கு முன்பு வையுங்கள். அதனுடன் அங்கு, நெய் விளக்கு ஏற்றி, தாமரை பூ, அட்சதை, குங்குமம், நெய்வேத்தியம், அவல் அல்லது வேறு பாயாசம், 108 காசுகள் இவை அனைத்தையும் கடவுளுக்குப் படைத்துப் பூஜை வழிபாடு செய்ய வேண்டும். லக்ஷ்மி குபேர பூஜையின் போது முதலில் விநாயகரை வழிபட்டு பிறகு குலதெய்வத்தை வழிபட வேண்டும் அதனைத் தொடர்ந்து லக்ஷ்மிக்கும், குபேரனுக்கும் பூஜை செய்ய வேண்டும்.
லக்ஷ்மிக்கு பூஜை செய்வது எப்படி: லக்ஷ்மியின் திருவுருவப்படத்திற்குத் தாமரை பூ இதழ், குங்குமம், அட்சதை என மூன்றையும் 108 முறை தூவி கனகதாரா ஸ்தோத்திரம் அல்லது மஹாலக்ஷமிக்கு உண்டான மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.
குபேரனுக்குப் பூஜை செய்வது எப்படி: செல்வங்களின் அதிபதியாகக் கருதப்படும் குபேரனுக்குக் காசுகளின் சத்தம் மிகவும் பிடிக்குமாம். அதனால் சில்லறைக் காசுகள் அதாவது 108 ஒரு ரூபாய் நாணயமோ அல்லது 108 ஐந்து ரூபாய் நாணயமோ வைத்து வழிபடலாம். அதாவது, ஒரு தாமரை இதழ், அதனுடன் ஒரு காசு, கொஞ்சம் குங்குமம் சேர்த்து 108 முறை ஓம் குபேராய நமஹ எனக் கூறி குபேர பூஜை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, தனிப்பட்ட தேவைகளை நினைத்து மஹாலக்ஷமி மற்றும் குபேரனைப் பிரார்த்தனை செய்து, நெய்வேத்தியம் செய்த பாயாசத்தை குடும்பத்தோடு அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும்.
இதுபோன்ற ஒரு வழிபாட்டை நீங்கள் குடும்பத்தோடு இணைந்து மேற்கொள்ளும்போது வரும் காலம் வறுமை ஒழிந்து செல்வச் செழிப்போடு வாழ வழி பிறக்கும் என்கிறார் ஆன்மீகவாதியான தேச மங்கையர்க்கரசி.
இதையும் படிங்க: இந்த தீபாவளிக்கு மத்தாப்பை போல உங்கள் முகம் மிளிர வேண்டுமா?... அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!