நோய்த்தொற்று அதிதீவிரமாகப் பரவிவரும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பேணிகாப்பது இன்றியமையாதது என்றே சொல்லலாம். உடற்பயிற்சி மேற்கொண்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் போதுமான சத்துள்ள உணவுகள் தேவைப்படுகின்றன.
இதற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI- Food Safety and Standards Authority of India) வைட்டமின்-ஏ சத்து நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்துள்ளது.
எதற்காக வைட்டமின்-ஏ?
தெளிவான கண் பார்வை, ஆரோக்கியமான சருமம், எலும்புகள், உடல் திசுக்களின் நன்மைக்காக வைட்டமின்-ஏ சத்து உடலுக்கு அத்தியாவசியமாக இருக்கிறது. உடலின் உயிரணு சேதத்தை தவிர்க்கவும், ஆன்டி-ஆக்சிடன்ட்டாகச் செயல்படவும் வைட்டமின்-ஏ உதவுகிறது.
முக்கியமாக நோய்த்தொற்று காலத்தில் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்-ஏ சத்து உள்ள உணவுகளை உண்ண அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறது.
FSSAI பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?
வைட்டமின்-ஏ நிறைந்த தாவர வகைகள்தான் பட்டியலில் முதலாவதாக பரிந்துரைக்கப்படுகின்றன. இதன் பிறகு இனிப்பு உருளைக்கிழங்கு, பப்பாளி, தக்காளி போன்ற உணவுகள் பட்டியலில் இணைந்துகொள்கின்றன.
- இனிப்பு உருளைக்கிழங்கு:
இதில் அதிகளவு வைட்டமின் ஏ, சி உள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ள இது உடல் பருமன், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல சத்துள்ள உணவாக அமையும். எனினும் மருத்துவரை அணுகிய பின்பு இதனை எடுத்துக்கொள்வது நலம்.
- பப்பாளி:
இதில் வைட்டமின் ஏ, சி உள்ளன. இது தவிர நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்டுகளும் பப்பாளியில் இருக்கின்றன. வயிற்றில் குடல் இயக்கத்தைச் சீர் செய்யவும், உடலில் உள்ள நச்சுகளின் செரிமானத்தை தடுக்கவும் பப்பாளி உதவுகிறது.
மலச்சிக்கல் போன்ற வயிற்று கோளாறுகளை நீக்கவும் இது உதவி செய்கிறது. மேலும், பப்பாளி சருமத்தை மெருகேற்றும். மிக முக்கியமாக ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும் உதவுகிறது.
- தக்காளி:
தக்காளி போன்ற பழங்களின் பளிர் நிறங்களை வைத்தே அதில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளதை கண்டுகொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் சத்துகள், குளுட்டாதையோன் (glutathione), லைக்கோபீன் போன்றவை புற்றுநோய் போன்று பொல்லாத நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். சருமத்தின் ஆரோக்கியத்தையும் தக்காளி பேணிகாக்கும். தக்காளியில் வைட்டமின் சி, கே, இரும்பு, ஃபோலேட் (Folate) எனப் பல ஊட்டச்சத்துகள் உள்ளன.
![FSSAI prescribed vitamin A foods for immunity boosting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8499227_thum.jpg)
- கேரட்:
வயிற்றின் செரிமானத்தை சமநிலையில் வைத்திருக்க கேரட் உதவுகிறது. இதிலும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இதயத்தை பாதுகாக்கும் லைக்கோபீன் ஆன்டி-ஆக்சிடன்ட் கேரட்டில் அதிக அளவில் உள்ளது.
- மாம்பழம்:
இதைச் சாப்பிட தயங்கும் யாராவது உலகில் இருப்பார்களா? மாம்பழம் அவ்வளவு சுவையானது மட்டுமல்ல சத்து நிறைந்த பழமும்கூட. வைட்டமின் ஏ பட்டியலில் உள்ள இந்தப் பழத்தில் வைட்டமின் இ, சி, நார்ச்சத்து இருக்கின்றன. செரிமானத்திற்கு உதவும் இந்தப் பழத்தில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்கும் மாயாஜாலமும் உள்ளது. இதில் உள்ள மங்கிஃபெரின் (mangiferin) புற்றுநோய், இதய நோய்கள் உடலை அண்டவிடாமல் பாதுகாக்கிறது.
![FSSAI prescribed vitamin A foods for immunity boosting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8499227_thumbnjk.jpg)
- பச்சை இலை காய்கறிகள்:
பட்டியலில் கடைசியாக இருந்தாலும் மிக முக்கியமானவை இவை. இவற்றில் வைட்டமின் சி, பி, மெக்னீசியம், நார்ச்சத்து, கனிமச்சத்து ஆகியவை உள்ளன. கண்பார்வையைப் பாதுகாக்கவும், உடல் ரத்த அழுத்த அளவை சீரக வைக்கவும் உதவக்கூடிய ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் இவற்றில் உள்ளன.
இதையும் படிங்க... கரோனாவை எதிர்க்கும் உணவுகள் இவைதானாம்!- பரிந்துரைக்கப்படும் உணவுகள்