சென்னை: முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் கண்ணாடி முன்பு நின்று என் உதடு ஏன் கருப்பாக இருக்கிறது அல்லது வெளிர்ந்து போய் இருக்கிறது எனத் தனிமையில் கவலை கொள்ளாதவர்கள் மிகக் குறைவுதான். அதிலும் குறிப்பாகப் பெண்கள் தங்கள் உதடுகளைச் சிவப்பாகத் தோற்றமளிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடைகளில் கிடைக்கும் லிப்ஸ்டிக்-குகளை வாங்கி பூசிக்கொள்கின்றனர். என்னதான் லிப்ஸ்டிக் போட்டாலும் அது உங்களின் இயற்கையான அழகு அல்ல. உதட்டைச் சிவப்பு நிறத்தில் மாற்ற சில ஆலோசனைகளைப் பார்க்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.
புகை பிடித்தல்; புகை படிக்கும் பழக்கம் இருந்தால் முதலில் அதை முற்றிலுமாக கைவிடுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் என்பதைத் தாண்டி உதடுகள் கருப்பாக மாற இது முக்கியமான காரணம். அதில் இருக்கும் நிகோடின் மற்றும் தார் போன்ற மூலக்கூறு மெது மெதுவாக உதட்டின் சருமத்தில் பட்டு உதடு கருப்பாக மாறிவிடும். அதற்குப் பிறகு நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் உதட்டில் இயற்கையான சிவந்த நிறத்தைப் பெற முடியாது.
ஆரோக்கியத்துடன் தொடர்புடையது உதட்டின் சிவப்பு; உதடு வெளிர்ந்துபோய் இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்றுதான் அர்த்தம். குறிப்பாகப் பெண்களுக்கு இரத்த சோகை இருக்கும். அவர்களது உதடு வெளிர்ந்துபோய் உயிர் இன்றி காட்சியளிக்கும். அப்படி இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
போதுமான தண்ணீர் குடிப்பது; சருமத்திற்கும், உடல் ஆற்றலுக்கும் மட்டும் அல்ல உதடு சிவப்பிற்கும், புத்துணர்ச்சியுடன் காட்சியளிப்பதற்கும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் அந்த தண்ணீரை நீங்கள் வாய் வைத்து உதட்டை நன்றாக நனைத்துக் குடியுங்கள். இப்படிச் செய்யும்போது உங்கள் உதட்டிற்குத் தேவையான ஈரப்பதம் உள்ளேயும், வெளியேயும் முழுமையாகக் கிடைக்கும்.
உதட்டைச் சிவப்பாக்க மசாஜ்; உதட்டை சிவப்பாக்க இரண்டு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணை அல்லது நெய் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கொஞ்சம் ஏழுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து உதட்டை மெதுவாக மசாஜ் செய்துகொடுங்கள். அதனைத் தொடர்ந்து 15 நிமிடம் கழிந்து அதைக் குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்யுங்கள். வாரத்திற்கு மூன்று முறை இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதடு சிவப்பாக மாறும். அதேபோல, மாதுளை பழத்தின் சாற்றை உதட்டில் அடிக்கடி தேய்த்துவர உதடு சிவக்கும். உதட்டுச் சாயங்களை அதிக அளவில் பயன்படுத்தாதீர்கள். அதுவே உங்கள் உதட்டைக் கருப்பாக மாற்றும்.
உதடு சிவக்க உணவுகள்; உதடு சிவக்க என்னதான் நீங்கள் லிப் பாம் போட்டாலும், அழகு பராமரிப்புகளை முயற்சித்தாலும் உணவு மிக முக்கியமான ஒன்று. இந்நிலையில் நீங்கள் உட்கொள்ளும் உணவில் பீட்ரூட், கேரட், கீரை வகைகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் முழுமையான பங்களிப்பை வழங்கும்.
இதையும் படிங்க: தாம்பத்திய உறவில் ஆர்வம் இன்மை: காரணம் என்ன? தீர்வு என்ன?