கரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதிலும் பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் பல வளர்ந்த நாடுகள் முனைப்புக் காட்டிவருகின்றன. இந்நிலையில் ரஷ்யா இதற்கான முதல் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது.
சமீபத்தில், டாக்டர் ரெட்டியின் மருத்துவ ஆய்வகம் ரஷ்ய கோவிட்-19 தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனையை இந்தியாவில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கக்கோரி விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது.
"மருத்துவர் ரெட்டியின் ஆய்வகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பற்றி மருத்துவ வல்லுநர் குழு (The Subject Expert Committee) முழுமையான மதிப்பீட்டைக் கொண்டிருந்தது. மேலும் இந்தக் குழு, ரெட்டியின் ஆய்வகத்திலிருந்து கூடுதல் தகவல்களுடன் திருத்தப்பட்ட நெறிமுறையைக் கேட்டுள்ளது. இதனால் ஆய்வகம் தற்போது ஒரு புதிய நெறிமுறையை வழங்க வேண்டும்” என்று அரசு உயர் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகளையும் அதன் விநியோகத்தையும் நடத்த இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் (டாக்டர் ரெட்டி ஆய்வகம்) ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (ஆர்.டி.ஐ.எஃப்.) கைக்கோத்துள்ளது.
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின்படி, இந்திய மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்திற்கு 100 மில்லியன் டோஸ் COVID-19 தடுப்பூசியை ரஷ்யா வழங்கும்.
"இதற்கு அனுமதி அளிப்பதற்கு முன், ரஷ்ய கோவிட் 19 தடுப்பூசி இந்தியாவில் 2, 3ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளை நடத்துவதற்கு மருத்துவர் ரெட்டியின் ஆய்வகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் தொழில்நுட்ப மதிப்பீட்டை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஆய்வுசெய்வார்” என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆர்.டி.ஐ.எஃப்.இன் தலைமை நிர்வாக அலுவலர் கிரில் டிமிட்ரிவ், இந்தியாவில் தங்களது ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவது குறித்து இந்திய அரசு மற்றும் இந்திய மருந்து உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தெரிவித்தார்.
மேலும், ஒரு பிரபல மருத்துவ இதழான தி லான்செட்டில், ரஷ்ய தடுப்பூசியின் முதல், இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் அதன் பாதுகாப்பு, செயல்திறனை நிரூபிக்கின்றன என குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆர்.டி.ஐ.எஃப்., காமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் இணைந்து உருவாக்கிய ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ரஷ்யாவின் சுகாதாரத் துறையினரால் பதிவுசெய்யப்பட்டது. இதுதான் கோவிட்-19க்கு எதிராக உலகில் முதன்முறையாக பதிவுசெய்யப்பட்ட தடுப்பூசி ஆகும்.
ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஸ்புட்னிக் வி என்பது மனித அடினோ வைரல் திசையன் தடுப்பூசி ஆகும். இது கரோனா நோய்க்கு எதிராகப் போராடுகிறது எனத் தெரிவித்துள்ளது.