சென்னை: இனிப்பும், இனிப்பான செய்தியும் யாருக்கு தான் பிடிக்காது. அந்த வகையில் இனிப்பான கேரட் அல்வா தயார் செய்வது எப்படி என்ற இனிப்பான செய்தியை இங்கே பார்க்கலாம். கேரட் அல்வா.. மிகவும் எளிமையான செய்முறை, ஆரோக்கியமான உணவு, இதற்கான செலவும் குறைவுதான். வீடுகளில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கேரட் அல்வாவை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழலாம். பொதுவாக, உணவு உட்கொண்ட பின் இனிப்பு உட்கொள்வது பலரது உணவுப் பழக்க வழக்கத்தில் உள்ள நடைமுறை. இதற்கு கடைகளில் இருந்து வாங்கி உட்கொள்ளும் இனிப்புகளை தவிர்த்துவிட்டு, இதுபோன்று கேரட் அல்வா தயார் செய்து உட்கொள்ளலாம். இந்த கேரட் அல்வா தயார் செய்யும்போது பல வீடுகளில் வெள்ளை சர்க்கரை சேர்த்து தயார் செய்வார்கள். ஆனால் ஆரோக்கியமான முறையில் வெல்லம், பனை சர்க்கரை உள்ளிட்டவை சேர்த்தும் கேரட் அல்வா தயார் செய்யலாம்.
இதையும் படிங்க: இனிப்பு நிறைந்த கேரட் அல்வா... குளிர்காலத்திற்கு ஏற்ற உணவா?..
கேரட் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்:
கேரட் - அரை கிலோ
பால் - 1 கப்
துருவிய வெல்லம் - அரை கப்
நெய் - 4 ஸ்பூன்
முந்திரி, பாதாம் - 10 எண்ணிக்கை
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை: அரைக்கிலோ கேரட்டை கழுவி தோல் நீக்கி, துருவி கொள்ளவும். 1 கப் பாலை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக காய்ச்சி ஆற விடவும். இப்போது அடுப்பில் வாணலியை வைத்து, அதில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து, முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்தப்பின் அவற்றை தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதன் பின் முந்திரியை வறுத்த அதே பாத்திரத்தில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் அதனுடன் காய்ச்சிய பாலை ஊற்றி, நன்றாக வேக விடவும். சிறிது நேரம் கழித்து துருவிய வெல்லத்தை சேர்த்து கிளர வேண்டும். நன்றாக இளகிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து அது, அந்த கேரட் நன்றாக வதங்கி, அல்வா பதத்திற்கு வரும். அதுவரை கிளர வேண்டும். அதன் பிறகு, அதில், வறுத்த முந்திரி மற்றும் பாதாமை சேர்க்க வேண்டும். அவ்வளவு தான். இறக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கினால் போதும். சுட சுட நெய் மணக்கும், ஹெல்தியான கேரட் அல்வா தயார்.
இதையும் படிங்க: இனிப்பு நிறைந்த கேரட் அல்வா... குளிர்காலத்திற்கு ஏற்ற உணவா?..