சென்னை: கோடைக் காலத்தோடு ஒப்பிடுகையில், குளிர்காலம், பரவாயில்லை எனத் தோன்றலாம். ஆனால் குளிர்காலத்தில் உடல் பலவீனமடைந்து ஏகப்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இது மட்டுமில்லாமல் குளிர்காலத்தில் சரும வறட்சி, உடல் எடை அதிகரிப்பு, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் நாம் நமது உணவுப் பழக்க வழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், சில வகையான உணவுகளை உட்கொள்வதால் சிறந்த பலன் கிடைக்கும் எனவும் உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் அந்த உணவு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு சுவையில் இருந்தால் எப்படி இருக்கும். ஆமா, ஹெல்தியான கேரட் அல்வா தான் இந்த குளிர் காலத்திற்கு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிறந்த உணவு. சாதாரண கேரட் அல்வாவில் என்ன இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்: குளிர்காலத்தில் உடலில் சூரிய ஒளி படாது. இதனால் விட்டமின் டி குறைபாடு ஏற்படும். இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். இந்த பிரச்சினையை சரி செய்ய கேரட் அல்வாவை உட்கொள்ளலாம். ஏனெனில் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் கேரட் அல்வாவில் நாம் பயன்படுத்தும் பால், ஏலக்காய், பாதாம், முந்திரி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்: குளிர்கால சரும வறட்சி, சுவாச பிரச்சினைகள் போன்றவை ஏற்படும். குளிர்காலத்தில் குளிருக்கு இதமாக சூடாக சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் கலோரிகள் நிறைந்த உணவுகளை தின்று விடுவோம். இதனால் உடல் எடையும் அதிகரித்து விடும். கேரட் அல்வாவை உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம். ஏனெனில் கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆகவே வயிறு நிரம்பியிருப்பதாக தோன்றும். அடிக்கடி பசி எடுக்காது.
உடலிற்கு வெப்பத்தை தரும்: குளிர்காலத்தில் எதை சாப்பிட்டாலும் அதை சூடாக சாப்பிடவே மனம் விரும்பும். மேலும் உடலிற்கு வெப்பத்தை தரும் உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிடுவோம். அந்த வகையில் கேரட் அல்வா ஒரு சிறந்த உணவாகும். ஏனெனில் கேரட் அல்வா தயாரிப்பதற்கு நாம் சேர்க்கும் நெய், பால், முந்திரி, பாதாம் போன்றவற்றில் கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கும். இவை உடலுக்குத் தேவையான வெப்பத்தை வழங்கும். மேலும் குளிர்காலத்தில் ஏற்படும் சோம்பலை போக்கி, உற்சாகத்தை அளிக்கக்கூடிய உணவாக உள்ளது.
இயற்கையான மாய்ஸ்சரைசர்: குளிர்ந்த காலநிலை சருமத்தை வறட்சியாக்கும். இதனால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இதிலிருந்து மீள நாம் கெமிக்கல் கலந்த மாய்ஸ்சரைசரையும், பாடி லோஷன்களையும் பயன்படுத்துகிறோம். இவை தற்காலிக தீர்வை மட்டுமே தரும். ஆனால் கேரட் அல்வா, சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. குறிப்பாக கேரட்டில் உள்ள விட்டமின் ஏ, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாவதற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக சருமம் ஈரப்பதம் பெற்று பளபளப்பாக இருக்கும்.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்: கேரட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை உடைத்து கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்.
இத்தகு சிறப்பு வாய்ந்த குளிர்காலத்திற்கு உகந்த உணவான கேரட் அல்வா தயாரிப்பை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: வாழைப்பழத் தோலை வைத்து ஃபேஸ் மாஸ்க்: சருமம் பளபளக்க, முக சுருக்கம் மறைய இதை ட்ரை பண்ணுங்க.!