உலக சகாதார அமைப்பு, கடந்த 4ஆம் தேதி கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் காசநோயாளிகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய தாக்கம் குறித்தும் அதனால் காசநோயாளிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் முதன்மையாக கூறப்பட்டுள்ளது.
மேலும், “உலக நாடுகள் மத்தியில் காசநோய் கண்டறிதல் சோதனை 25 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இது மோசமான அறிகுறியாகும். இதனால் காசநோயாளிகள் அதிகளவில் இறக்கக் கூடும்” என்று எச்சரிக்கை விடுக்கிறது. உலகம் முழுக்க 1.66 மில்லியன் காசநோயாளிகள் உள்ளனர். இது 2015ஆம் ஆண்டுக்கு சமமாக உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை கடுமையான ஊரடங்கு மார்ச் 25ஆம் தேதியிலிருந்து இன்று வரை தொடர்கிறது. இதற்கிடையில் காசநோயாளிகளின் எண்ணிக்கை 75 விழுக்காடு வரை குறைந்துள்ளது. கடந்த காலங்களில் வாரத்துக்கு 45 ஆயிரத்து 875 காசநோயாளிகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 11 ஆயிரத்து 367 காசநோயாளிகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர்.
தேசிய ஆன்லைன் காசநோய் கண்காணிப்பு அமைப்பின் (Nikshay 2) தரவை உள்ளீடுவதில் தாமதம், சுகாதார பணிக்கான வருகை குறைவு, சுகாதாரத்தை மறுசீரமைத்தல் மற்றும் காசநோய் சோதனை மற்றும் கண்டறிதல் குறைப்பு போன்றவை இதற்கு காரணம். இதேநிலைமை தொடர்ந்தால் உலகளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் காசநோயாளிகள் இறப்பு விகிதம் அதிகரிக்கக் கூடும்.
அதாவது காசநோயாளிகள் கவனிக்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது. இது காசநோயாளிகளின் அதிக இறப்பு எண்ணிக்கைக்கு வழிவகுக்கும். இந்த பேராபத்தை உணர்ந்து, காசநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல் மற்றும் பராமரிப்பு திட்டங்களின் செயல்பாட்டை உடனடியாக மீட்டெடுத்து துரிதப்படுத்த வேண்டும்.
கோவிட்-19 தொற்றுநோய்த் தாக்கம் உள்ள இந்த நேரத்திலும், காசநோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காசநோயாளிகள் பராமரிப்பு திட்டங்களின் அவசியத்தை உணர்ந்து, அதனை “அத்தியாவசியமான சுகாதார சேவையாக அறிவிக்க வேண்டும். ஒருவேளை இந்தக் கணிப்பு நிஜமானால், உலகளாவிய காசநோய் நிலை ஐந்து வருடங்கள் பின்னுக்குத் தள்ளப்படலாம். மேலும் இறப்புகளின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் பதிவானதை போல் மிக மோசமாக இருக்கலாம்.
உலகளவில் காசநோய் இறப்புகளில் பெரும்பாலானவை இந்தியாவில் நேர்கிறது. ஆகவே இந்தியாவில் காசநோயாளிகள் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகக்கூடும். சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியாவிட்டால், ஆயிரக்கணக்கான காசநோயாளிகள் உயிரிழக்கக் கூடும். ஆகவே கரோனா சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், அவர்களையும் மீட்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் விஷவாயு தாக்கி 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!