தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியைப் பிடிக்கச் சென்றபோது, ரவுடியின் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கை கார்த்திக் என்ற இளைஞர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காணொலி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள காணொலியில், 'ரவடி துரைமுத்துவைப் பிடிப்பதற்கு காவலர்கள் ஏன் சீருடை அணியாமல் சென்றனர்.
சீருடை எதற்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் அவர்கள் சீருடை அணியவில்லை? இனிமேல், எங்கள் சாதியைச் சேர்ந்த ரவுடிகளைப் பிடிப்பதற்கு காவல் துறையினர் அச்சப்படவேண்டும். துரைமுத்து சாகவில்லை எங்களைப் போன்ற இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளார்' எனப் பேசியுள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசி காணொலி வெளியிட்ட அந்த நபர் மீது, ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: விருதுநகரில் கரோனா உயிரிழப்பு 167ஆக உயர்வு