விருதுநகர் அரசு தலைமை மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று நள்ளிரவில் கர்ப்பிணி பெண்ணிற்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அப்போது அவருக்கு உதவிக்கு இருந்த செவிலியரை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த செவிலியர் மனமுடைந்துபோனார்.
இதனையடுத்து இன்று காலை அந்த செவிலியரை ஒருமையில் திட்டியதற்காக 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தகவலறிந்து வந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன், விருதுநகர் கிழக்கு காவல் நிலைய காவலர்கள், வட்டாட்சியர் அறிவழகன் ஆகியோர் செவிலியர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர்கள் பணிக்கு திரும்பினர்.
செவிலியர்கள் பணி புறக்கணிப்பின்போது எந்த வித நோயாளிகளுக்கும் பிரச்னை ஏற்படவில்லை. ஆனால் அப்பகுதி சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.