மாநிலம் முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் 1,671 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்தனர். இதையடுத்து வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தனியார் கலைக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் பார்வையிட்டார். அதன்பின்பு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.
மேலும் வருகிற மே 23ஆம் தேதி வரை ஐந்தடுக்கு பலத்த பாதுகாப்பு இந்த மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.