மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக் தாகூர் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக, அக்கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் திமுக மாவட்டச் செயலாளர்களான தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், விருதுநகர் தொகுதி எம்எல்ஏ ஆர்.ஆர். சீனிவாசன் என உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாணிக் தாகூர், "விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தொகுதிக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் பிரச்னை, சாத்தூரில் ரயில்வே மேம்பாலம், தீப்பெட்டி தொழில் சாலை, இப்படி ஒவ்வொரு தொகுதிக்கும் தீர்க்க வேண்டிய பிரச்னை இருந்துவருகிறது. இவற்றை சரி செய்ய அந்தந்த தொகுதி மக்களோடு சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். மேலும் இவை அனைத்தையும் தீர்த்துவைக்க என்னால் முடிந்த வரை 100 விழுக்காடு நான் பாடுபடுவேன்" என அவர் உறுதியளித்தார்.