விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த இரண்டு தினங்களாகவே பலத்த காற்று வீசுவதோடு, அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.
நேற்று இரவு(ஆகஸ்ட் 5) பலத்த சூறாவளி காற்று வீசியதால், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இதேபோன்று மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான ராஜபாளையம் அய்யனார் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில் பகுதி, சேத்தூர் ஆதிபுத்திர அய்யனார் கோயில், சாஸ்தா கோயில் போன்றப் பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் பலத்த காற்றினால், தென்னை மரங்கள் பல இடங்களில் வேரோடு சாய்ந்து உள்ளன.
அந்த மரத்தில் உள்ள தேங்காய்களும் கீழே விழுந்ததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உயர் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சார பாதிப்புமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல், வீடுகளில் அத்தியாவசியப் பணிகளை செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சேத்தூர் பகுதியில் தேங்காய்பேட்டையில் தகரத்தால் அமைக்கப்பட்ட மேற்கூரைகள் காற்றில் பறந்து அருகே உள்ள விவசாய நிலங்களில் விழுந்துள்ளன. அந்தப் பகுதிகளை ராஜபாளையம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன், வேளாண்மைத் துறை அலுவலர் தனலட்சுமி, வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோவையில் பலத்த காற்றுடன் கூடிய மழை - சாய்ந்த பேருந்து நிலையத்தின் பெயர்ப் பலகை