மருத்துவமனை வளாகம் தூய்மை, மருந்துக்கழிவு மேலாண்மை, சிறந்த மருத்துவச் சேவை, விழிப்புணர்வுப் பதாகைகள், பிரசவ அறைகள் பராமரிப்பு, சிசுக்கள் பராமரிப்பு, தொற்றா நோய் பிரிவு, மகளிர் பரிசோதனை பிரிவு, ஸ்கேன், சித்த மருத்துவப் பிரிவு, மூலிகைத் தோட்ட பராமரிப்பு உள்ளிட்ட காரணிகளில் சிறந்து விளங்கும் மருத்துவமனைக்கு மத்திய அரசால் காயகல்ப விருது வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் மேற்கண்ட அனைத்து காரணிகளிலும் சிறந்து விளங்கியதாக 99.3 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இந்த விருதை வென்றுள்ளது.
இது குறித்து காரியாபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஆரோக்கிய ரூபன் கூறுகையில், “இந்த மருத்துவமனையைச் சுற்றியுள்ள 32 கிராம மக்களும் இங்குதான் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் 300 வெளிநோயாளிகளும், மாதத்தில் 400 உள்நோயாளிகளும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இங்கு பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் கடின உழைப்பால் மத்திய அரசின் காயகல்ப விருது கிடைத்தது மகிழ்ச்சி” என்றார்.
இதையும் படிங்க...கரோனாவால் கைதிகளின் கைவினைப்பொருள்கள் தயாரிக்கும் பணி நிறுத்தம்!