ராமநாதபுரம் மாவட்டம் கீழகன்னிச்சேரி பகுதியைச் சேர்ந்த நாகநாதனின் மகன் ஹரிஷ்பாபு (17). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ஹரிஷ்பாபு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, மாணவரின் தந்தை நாகநாதன் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ’கடந்த 21ஆம் தேதி ஹரிஷ்பாபுவும் அவருடன் படிக்கும் மாணவரும் விடுதி காப்பாளர் அனுமதியில்லாமல் வெளியில் சென்று உணவு அருந்தி வந்துள்ளனர்.
இதையடுத்து, விடுதி காப்பாளர் அளித்த தகவலின் பேரில் பள்ளி தலைமையாசிரியர் தன்னை வரவழைத்து ஹரிஷ்பாபுவைக் கண்டித்து இனிமேல் இவ்வாறு நடந்தால் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துவிடுவேன் எனக் கூறி 5,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கணித ஆசிரியர் ஆறுமுகம் என்பவர் பாபுவை அடித்துள்ளார்.
இதனால், மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். எனவே, தனது மகன் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
அதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ், விடுதி காப்பாளர், பள்ளி கணித ஆசிரியர் ஆறுமுகம் உட்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: