விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் பன்னீர்செல்வம்(50) சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வரும் சுதந்திர கிளாரா(48) தம்பதியினர் வசித்துவருகின்றனர். பன்னீர்செல்வம் அதிகாலையில் வியாபாரத்திற்காக வெளியே சென்றுள்ளார். காலையில் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த கிளாரா வீட்டில் உள்ள தொலைக்கட்சிப் பெட்டி மின்கசிவால் திடீரென வெடி சத்தத்துடன் தீப்பிடிக்க ஆரம்பித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவர் பதற்றத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. செய்வது அறியாது கதறி அழுத கிளாராவின் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீடு முழுவதும் தீப்பிடித்து புகை மண்டலமாக இருந்துள்ளது. வீட்டினுள் சமையல் கேஸ் சிலிண்டர் இருந்ததால் உள்ளே செல்ல பயந்த அவர்கள் உடனே சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள், கட்டில், பீரோ என அனைத்தும் தீயில் முழுவதுமாக எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு சுமார் நான்கு லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சாத்தூர் நகர காவல் துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க...அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!